Skip to main content

 அகத்தீ- நம்ம சந்தை 9/7/17


நம்ம சந்தை

இந்த நிகழ்வை பற்றிய பதிவை வேலைப்பளுவினால் சரியான நேரத்தில் பகிர முடியாமல் போனது.

அகத்தி நண்பர்கள் மற்றும் இந்த நிகழ்வில் மூலம் அறிமுகமான தோழர்கள் பெரும் உழைப்பினால் ஜூலை 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு முதல் முறையாக நம் தாம்பரத்தில் அகத்தி தோட்டத்தில் தொடங்கியது. மறத்தமிழன் இசைக்குழு சார்பாக தமிழர்களின் பாரம்பரிய பறை இசையுடன் நிகழ்வு கோலாகலமாக தொடங்கியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பறை இசைக்கு ஏற்ப நடனமாடி குதூகலித்தனர். பிறகு வானகம் மருதம் குமார் அவர்கள் இயற்கை வாழ்வியல் என்ற தலைப்பில் உரையாற்றினார். மிகவும் எளிமையாக இந்த பரபரப்பான நகர வாழ்க்கையில் நாம் கவனிக்க மறந்த விஷயங்களை நமக்கு நினைவூட்டினார். வானகத்தில் பயிற்சி பெற்று அங்கு வந்திருந்த தோழர்களை அடையாளம் காட்டி கௌரவித்தார். பிறகு அகத்தியின் உரிமையாளர் ஆடிட்டர் ராஜசேகர் அவர்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்காக குமார் அண்ணா நினைவு பரிசு வழங்கினார். அவரைத் தொடர்ந்து சித்த மருத்துவர் சரவண குமார் அவர்கள் உணவே மருந்து என்ற தலைப்பில் அவருடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அதன் பிறகு உணவு இடைவேளையில் எங்கள் குழுவை சேர்ந்த கலைவாணி அவர்களின் கைப்பக்குவதால் சமைத்த சிறுதானிய உணவை அனைவரும் சுவைத்து மகிழ்ந்தனர். உணவு இடைவேளைக்கு பிறகு தோழர் பரமேஷ் அவர்கள் மாடித்தோட்டம் பற்றிய நுணுக்கங்களை எளிமையாக விளக்கினார். முதன்முறை நம்ம சந்தை நிகழ்வு நடைபெற்றதால் நமக்கு பரிச்சயமான விவசாய நண்பர்களை அழைத்திருந்தோம். குறிப்பாக விழுப்புரத்தில் இருந்து நமக்காக வந்திருந்த பாண்டியன் அவர்களின் இயற்கை விவசாயத்தில் விளைந்த கத்திரி மற்றும் பனை ஓலைகளிலால் ஆன கைவினை பொருட்களுக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. புதுக்கோட்டை வீரமணி அவர்களின் எலுமிச்சைக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. புதுக்கோட்டை ரோஸ் அமைப்பு அவர்களிடம் இருந்து நேரடியாக சிறுதானியம், மரச்செக்கு எண்ணெய்,பாரம்பரிய அரிசி வகைகள் போன்ற எண்ணற்ற பொருட்களை விற்பனை செய்த மணி மற்றும் இளா அவர்களின் அங்காடிக்கும் நல்ல வரவேற்பு கிட்டியது. இவர்களை தவிர caxton மற்றும் பெருமாள் அவர்களின் கருப்பட்டி திண்பண்டங்கள், பாரிவேல் அவர்களின் சிறுதானிய திண்பண்டங்கள்,அரசு மற்றும் மஹாலக்ஷ்மி அவர்களின் மண்பாண்ட பொருட்கள்,ஸ்ரீதர் அவர்களின் கீரைகள்,பரமேஷ் அவர்களின் நாட்டு கீரை மற்றும் காய்கறி விதைகள் போன்ற அனைவருக்கும் நல்ல வரவேற்பு கிட்டியது.அதே நாளில் குழந்தைகளுக்கான மாதாந்திர ஒன்றுகூடல் நடந்தது. மரபு சார்ந்த விஷயங்களை குழந்தைகளிடம் கொண்டு செல்வதற்கான ஒரு சிறு முயற்சி. குறிப்பாக அன்று பிறந்த நாள் கொண்டாடிய அநீலா அகத்தில் தோட்டத்தில் இருந்த ஒரு பப்பாளி மரத்திற்கு நன்றி கூறிவிட்டு அதில் இருந்த ஒரு கனியை பறித்து கொண்டாடினார். தோழர் அனிதா அவர்கள் காகிதத்தினால் கலைகளை உருவாக்கும் origamy குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார். நிகழிச்சியின் நிறைவில் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் அனைவரும் தங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக தோழர் பாண்டியன் அவர்கள் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலையை தன் கண்ணீரினால் வெளிப்படுத்தினார். தண்ணீர் விலைமதிப்பு அற்றது. அதை வீணடிக்காமல் இருப்போம். தண்ணீரை சேமிப்போம் விவசாயத்தை காப்போம் என்ற மன உறுதியுடன் அனைவரும் விடை பெற்றார்கள்.

நிகழ்வுக்கு வந்திருந்த அனைவருக்கும் அகத்தி சார்பாக மிகப்பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறோம். வருகை பதிவேட்டில் பொறுமையாக பதிவு செய்த வைஷ்ணவி,அகத்தியை சுத்தம் செய்ய உதவிய புழல் நண்பர்கள்,ஜெய் தோழர்,கெளதம், செம்மை நண்பர்கள், நான் இங்கு பதிவிடாமல் விட்ட அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

குறிப்பு: நம்ம சந்தை மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். அடுத்த சந்தை 13 ஆவது ஆகஸ்ட்(13/08/2017 ) அன்று நடைபெறும்.























































Comments