Skip to main content

 நமக்கான கல்வி எது ?

மாற்றுக்கல்வி சாத்தியமா ?
குழந்தைகளின் உலகம் எப்படி இருக்கும் ?
சூழலியல் கல்வியின் அவசியம் வேண்டுமா ?
வரும் நாட்களில் இந்த கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சியாக நம் அகத்தியில் ஒரு சந்திப்பை திட்டமிடவுள்ளோம்.
இப்போதுள்ள கல்வி முறை சுயசிந்தனையையும், தனித் திறமைகளையும், கேள்வி கேட்கும் பழக்கத்தையும் அறவே மறுத்து நவீன கொத்தடிமைகளாக நம் குழந்தைகளை பன்னாட்டு நிறுவனங்களுக்காக உருவாக்கும் நோக்கத்தோடு இருக்கின்றது என்பதை நாம் அறிவோம்.
இந்த சூழலில் கடந்த 2016 அகத்தியில் நடந்த குழந்தைகளுக்கான இயற்கை வாழ்வியல் கோடை முகாம் ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக குழந்தைகள் முகாமில் வந்த பெற்றோர்கள் சிலரையும் அகத்தி நண்பர்களையும் இணைத்து கொண்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய மிக முக்கியமான மாற்றுக் கல்விக்கான இடங்களாக திகழும் திருவண்ணாமலையில் உள்ள மருதம் பண்ணைப் பள்ளி, சிங்காரப்பேட்டை உள்ள குக்கூ காட்டுப்பள்ளி நாகர்கூடலில் (தருமபுரி மாவட்டம் ) உள்ள புவிதம் பள்ளிக்கு சென்று வந்தோம். பயணத்தில் பங்கெடுத்த எல்லாருக்கும் ஒரு புதிய பார்வையை, குழந்தைகளைப் பற்றியும் கல்வி முறை பற்றியும் அதற்கான மாற்று சாத்தியக் கூறுகளைப் பற்றியும் ஒரு நம்பிக்கையை அளிப்பதாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாக அகத்தியில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளுக்கான கோடை முகாமும் நடத்தப்பட்டது. இதில் குழந்தைகளின் உலகம், நமது கல்வி முறையில் உள்ள சிக்கல், அதைப்பற்றிய பகுத்தாய்வும் அனுபவ பகிர்வும், தொடர்ச்சியாக நாம் இயங்குவதற்கான ஆற்றலையும் இந்த சந்திப்புகள் கொடுத்தது.
இதன் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் கழித்து கடந்த பிப்ரவரி மாதம் 16, 17 அன்று மீண்டும் அதே ஒரு பயணத்தை புதிய நண்பர்களோடும் உறவுகளோடும் சென்று வந்தோம். இந்தப் பயணத்தில் கடந்தமுறை சூழலியல் செயல்பாட்டாளர் பியூஸ் மனுஷின் கூட்டுறவு காட்டையும் இந்த முறை அவரது பசுமை தொழிற்சாலை அமைந்திருக்கும் ஜருகுவில் அவரை சந்தித்து பேசியது பயணத்தில் பங்கெடுத்த எல்லோருக்கும் ஒரு உள்ளடக்கிய பார்வையை கொடுத்ததாக அமைந்தது.
இது போன்ற பயணங்களில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த பதிவில் உள்ள பின்னூட்டத்தில் (comment) தங்கள் கைபேசி எண்ணுடன் முன் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பயணங்களைத் திட்டமிடும்போது பதிவு செய்த நண்பர்களுக்கு முறையாக அறிவிக்கப்படும்.














Comments