Skip to main content
அகத்தியின் பாட்டி
_____________________
"பெரியார் ஒரு முறை கூட்டத்திற்கு எங்கள் வீடு இருக்கும் தெரு வழியாக செல்லும்பொழுது அவருடைய வண்டி பழுதடைந்தது. அதனால் தற்காலிகமாக எங்கள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தார். சிறுவர்களாக விளையாடிக்கொண்டிருந்த நாங்கள் அவரைப் பார்த்தவுடன் பயந்து போய் வீட்டினுள் சென்று ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தோம். தண்ணீர் கேட்ட பொழுது கூட கொடுக்கவில்லை. பிறகு சிறிது நேரம் கழித்து எங்கள் அப்பா வந்த பிறகு தண்ணீர் கொடுத்தோம். அப்பாவும் பெரியாரும் சிறிது நேரம் சமகால அரசியல் சூழல்கள் பற்றி அளவலாடினர். அப்பா அன்று தமிழகம் அரிந்த காந்தியவாதி (ஜி. சுப்பிரமணியம்). காந்தியுடன் இணைந்து அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டவர். ஏராளமான நற்குணங்களுக்கு சொந்தக்காரர். எந்தப் பாகுபாடும் ஏற்றத்தாழ்வும் யாரிடமும் பார்த்ததில்லை.
பெரியாரைப் பற்றி சிறுவர்களாக இருக்கும் போது எங்களுக்கு இருந்த அபிப்பிராயம், அவர் பிராமணர்களுக்கு எதிரானவர் மிகவும் மோசமானவர் என்று நினைத்திருந்தோம். ஆனால் அது எவ்வளவு முட்டாள்தனம் என்பது பிறகுதான் நான் உணர்ந்து கொண்டேன்.
பெரியார் மற்றும் அம்பேத்கரின் பங்கு மிகவும் முக்கியமானது. என்னுடைய 80 வயதில்தான் இவர்களின் சிந்தனை பற்றி ஓரளவுக்காவது தெரிந்துகொண்டேன் என்று நினைக்கும் பொழுது மிகவும் வெட்கப்படுகிறேன். ஆணவப்படுகொலைகள் என்ற பெயரில் நடக்கும் கொடூரங்கள் மற்றும் ஜாதி ரீதியான பாகுபாடுகளை பார்க்கும் போது ரொம்ப வேதனையா இருக்கு. சிறு வயதில் எங்கள் நிலத்தில் வேலை செய்பவர்கள் குடிக்க தண்ணீர் கேட்கும் போது தள்ளி இருந்து மேலிருந்து ஊத்துவோம். அதை அவர்கள் கையில் வாங்கி குடிப்பார்கள். இந்த காட்சி எனக்குள் நிழலாடிக் கொண்டிருக்கிறது. இது பற்றி இப்போது நினைக்கும்போது எவ்வளவு பெரிய குற்றத்தை செய்தேன் என்று ரொம்ப வருத்தமாக இருக்கு. ஜாதிய பாகுபாடு தீண்டாமை போன்ற விஷயங்களைப் பற்றிய பெரிய எண்ணங்கள் இல்லாத காலகட்டம். இதைப்பற்றி உணராமல் எப்படி இவ்வளவு நாட்கள் கடத்தினேன் என்று என்னைப் பற்றி நினைக்கும் பொழுது அசிங்கமாகமாகவும் இருக்கு."
பாட்டி மீது பேரன்பு கொள்வதற்கு இவரின் வாஞ்சையான விசாரிப்புகளும் பழகிய விதங்களும் காரணமாக இருந்தாலும், பெரும் மரியாதை ஏற்பட்டதற்கு பாட்டியுடன் நடந்த இந்த உரையாடல்கள் முக்கிய காரணமாக இருந்தது.
"நான் வயசானவ நேரம் தெரியாம எதையாவது உளறிக் கொண்டே இருப்பேன் உங்களுக்கு எல்லாம் முக்கியமான வேலை இருக்கும் போய் பாருங்க...." உங்களுடைய அனுபவமும் வார்த்தைகளும் எங்களுக்கு எவ்வளவு பெரிய ஊக்கத்தை கொடுத்தது என்று வெறும் சொற்களால் விவரிக்க முடியாது பாட்டி.
என்னுடைய அம்மம்மா (அப்பாவின் அம்மா) எனக்கு உயிராக இருந்தவர். அவரைப்போலவே உங்களின் அணுகுமுறை பேச்சு சிந்தனை வாசிப்பு இருந்ததை பார்க்கும் போது என் கண்ணில் நீர் கோர்த்துக் கொள்ளும்.
ஆங்கில இந்து பத்திரிகையை தள்ளாடும் வயதில் முழுமையாக வாசித்து விட்டு என்னை பார்க்கும்போதெல்லாம் அன்றைய முக்கிய செய்திகளை நீங்கள் பகிர்ந்து கொண்ட விதம், அதில் வந்த சமூக நீதி தொடர்பான கட்டுரைகள் பற்றிய உங்களுடைய கருத்துக்கள் என்று எல்லாமே இன்றுவரை என் நினைவில் பசுமையாக உள்ளது.
அகத்தியில் நாங்கள் முன்னெடுத்த நிகழ்வுகளில் குறிப்பாக 'தளம்' வாசிப்பு வட்டமாக இருக்கட்டும், சிறார் களம் குழந்தைகள் ஒன்றுகூடலாக இருக்கட்டும் உங்களுடைய பங்களிப்பும், சிரிப்பும், அனுபவங்களும், வாழ்த்துக்களும் அன்றும் என்றும் எங்கள் அனைவரின் செயல்பாடுகளுக்கு பெரும் ஊக்கமாக இருக்கும் என்றால் அது மிகையல்ல.
சில மாதங்களுக்கு முன்பு உங்களை பார்க்க வந்தபோது படுக்கையிலிருந்து எழுந்து உட்கார முடியாத நிலைமையில், நான் யார் என்று உடனே நினைவில் வராத சூழலில் நான் சம்பந்தப்பட்ட விடயங்களை சொல்லி நினைவுபடுத்த முயற்சித்தோம் அகத்தி... தோட்டம் தாம்பரம்.... என்றவுடன்
"வைஷ்ணவி calm & composed... நீ என்ன மாதிரி லோடலொடனு பேசுவ" என்று நீங்கள் சொன்னவுடன் எங்களுடைய சிரிப்பை அடக்க முடியவில்லை. முறையாக செய்ய வேண்டும் என்று நினைத்து காலம் தள்ளி கடைசி வரை உங்களை முழுமையாக ஆவணப்படுத்த முடியாமல் போனது இன்றும் என்றும் எனக்கு குற்றணர்ச்சியாக இருக்கும். பாட்டி நாங்கள் எல்லோரும் உங்களை ரொம்ப நேசித்தோம் நேசிப்போம் எங்கள் எல்லோருக்கும் நீங்கள் பெரும் உந்துசக்தியாக இருப்பீங்க. உங்கள் வாழ்த்துக்கள் என்றும் எங்களுக்கு இருக்கும் என்ற பெரும் ஏக்கத்துடன் தோழர் பாரதி. கடந்த 29 நவம்பர் 2020 பாட்டியின் மறைவு செய்தி கேட்டவுடன், இறப்பை பற்றிய எந்த அச்சமும் இல்லாமல் நிறைவாக வாழ்ந்ததை குறிப்பிட்டு "உங்களுக்கெல்லாம் சிரமமாக இருக்கிறேன் என்று நினைத்தால் தான் வருத்தமாக இருக்கு" என்ற உங்களுடைய வார்த்தைகள் என் நினைவில் வந்து சென்றது.
குறிப்பு: சாகித்திய விருது மற்றும் ஞானபீட விருது பெற்ற தலைசிறந்த தமிழ் எழுத்தாளர் அகிலன் அவரின் இணையர்.


























Comments