அகத்தீ - நினைவேந்தல்
வெற்றிடத்தை காற்று வந்து நிரப்புவது போல அல்ல மனித உறவுகளின் இழப்பின் வெற்றிடம்....
தோழன் காசியின் திடீர் இறப்புக்கு பிறகு இரண்டு மாதம் கழித்து நினைவு கூட்டத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது "நான் செத்துட்டா இதே மாதிரி செய்வீங்களா தோழர்" என்று கணேஷ் தோழர் ஒரு ஏக்கத்துடன் கேட்க புன் சிரிப்பை மட்டும் அப்போது அவருக்கு பதிலாக கொடுத்தேன்.
நினைவு கூட்டத்தில் இதை பகிர்ந்து கொண்ட பொழுது "எனக்கும் மண்டகுள்ள இதுதான் ஓடிக்கொண்டே இருந்தது. நான் செத்துட்டா யாராவது இந்த மாதிரி எனக்கு செய்வாங்களா அப்படின்னு..." என்று தீபா முணுமுணுக்க
நினைவு கூட்டத்தின் முடிவில் பெரும்பாலானவர்களுக்கு இந்த எண்ணம் ஓடிக்கொண்டு இருந்ததை உணர முடிந்தது.
காசி அக்கா "அவன் இவ்ளோ நண்பர்களை சம்பாதித்து வச்சிருக்கான் அப்படின்னு நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு. அவன் இருக்கும்போது உங்க எல்லோருடன் தான் இருந்தான்னு தெரியாம போயிடுச்சு. அவன எவ்வளவோ வாட்டி வேலைக்கு போக சொல்வேன். உன்ன நீ பார்த்துக்கவாது ஒரு நல்ல சம்பளத்துக்கு போக வேலை வாங்கி தரேன்னும் பல தடவ சொல்லி இருக்கேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் செய்தியை பார்த்துக்கிட்டே இருப்பான். விவசாய போராட்டம் நடக்கும்போது அதைப்பற்றி ரொம்ப உணர்ச்சிவசமாக எங்க கிட்ட பேசுவான். ஆனா அவன் எங்க போறான் யாரோட பேசுறான் என்ன பண்றான் எதுவுமே சொல்ல மாட்டான். அவன் நல்ல காரியங்களை தான் செஞ்சிருக்கானு இப்போ தெரியும் போதும், நீங்க இவ்ளோ பேர் அவன பாராட்டி சொல்லும் போதும் என் தம்பிய நினைத்து ரொம்ப பெருமையா இருக்கு..." என்று தன் தம்பியின் இழப்பை தாங்க முடியாமல் கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டார்.
தோழன் காசி இறந்த பிறகு, அவன் அக்காவிற்கு பிறந்த குழந்தைக்கு மாமா சானத்தில் இருந்து செய்ய வேண்டிய எல்லாவற்றையும் கண்டிப்பாக எங்களால் ஈடு செய்ய முடியாது ஆனாலும் எங்களால் முடிந்ததை செய்ய அனைவரும் உணர்வுபூர்வமாக முன் வந்தோம். காசியின் குடும்பத்திற்கு நாங்கள் இருக்கிறோம் என்பதை அவன் அம்மாவிடம் தெரிவித்தோம்.
"இந்த நிகழ்வோட எங்களை மறந்துடாம, எங்கள ஞாபகம் வைத்துக்கொண்டு எல்லாத்துக்கும் கூப்பிடுங்க தகவல் சொல்லுங்க" என்றார்.
காசி எங்கள் தோழமை மீது வைத்திருந்த நம்பிக்கையை நிறைவேற்றியதற்கான அங்கீகாரமாக இருந்தது காசி குடும்பத்தின் இந்த வார்த்தைகள்.
"காசிக்கு மரம் செடி வைக்கணும்னா ரொம்ப பிடிக்கும். என்னால் முடிந்த ஒரு சிறு தொகையை தரேன் அவன் நினைவா நீங்க எல்லோரும் மரங்களை வைக்கணும்னு கேட்டுக்குறேன்" என்று அவன் அக்கா எங்களிடம் பகிர்ந்து கொண்டார்.
காசி போன்ற எண்ணற்ற சமூகத்தின் மீது பேரன்பு கொண்டு செயல்பட்டு மறைந்து போனவர்களின் நினைவை அவர்களின் தோழமை வட்டம் எடுத்து செய்வதற்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கும். அப்படி முகம் தெரியாத பெயர் தெரியாத உணர்வுபூர்வமாக சமூகத்திற்காக செயல்பட்ட அனைவரையும் இத்தருணத்தில் நினைவு கூறுந்தோம்.
வரலாற்றில், சமூக மாற்றத்தில் தனி நபர்களின் பங்கை உள்வாங்கியவன் என்ற அடிப்படையில் ஒவ்வொரு சமூக செயல்பாட்டாளர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை துரிதமாக நிரப்ப முற்பட வேண்டும். அவர்கள் வெளிப்படுத்திய ஆற்றலை ஒருமுகப்படுத்தி மீண்டும் பேராற்றலுடன் நாம் செயல்பட ஒவ்வொரு வாய்ப்பையும், சந்தர்ப்பத்தையும், சந்திப்பையும் சாத்தியப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இதுவே நாம் இழந்தவர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகும். இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே இந்த நினைவு கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.
இரண்டு மாதம் கழித்து நினைவு கூட்டம் மூன்று மாதம் கழித்து நினைவு கூட்டத்தின் நினைவு பதிவு இப்படித்தான் போகுது வாழ்க்கை அப்படின்னு நினைக்கும் போது கொஞ்சம் வெறுப்பா தான் இருக்கு.
அகத்தியின் செயல்பாட்டில் காசியின் உழைப்பும் சிந்திய வியர்வையும் என்றென்றும் எங்கள் நினைவுகளில் இருக்கும்.
Comments
Post a Comment