காடா கல்லூரியா ?
பொதுவாக ஒன்றை பற்றிக் கூற வேண்டுமானால் அதன் வரலாறுதான் முதல்பாகத்தை ஆக்கரமிக்கும் என்பது வழக்கு ; ஆனால் அதனை தவிர்த்து இன்றைய இயற்கை நடைவல அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.
MCC கல்லூரி இந்தியாவில் இருக்கும் ஆங்கிலேய மிச்சங்களில் ஒன்று என்பதும் அதில் படிக்க சேர்வது கடினம் என்பதும் இன்றுதான் அறிந்துகொண்டேன்.
வாயில் காப்போர்களால் "என்ன வேண்டும் ? யார் நீங்கள்?" என்னும் கேள்வியுடன் உள்ளழைத்து; பயண முடிவில் நாம் நன்றி கூறியவுடன் சிரித்த முகத்துடன் வழியனுப்பி வைத்த-அக்கல்லூரியின் வயதையும், விரிந்த வனப்பையும் கண்டு கேட்டவுடன் பிரமிப்பு அடைந்தேன் ஆனால் மான் , மயில், வௌவால் ,கிரீபிள்ளை என ஏனைய விலங்கினங்கள் அங்கு சேர்ந்து படிக்கும்போது என்னால் அங்கு படிக்க முடியவில்லையே என்றெண்ணி பொறாமை கொண்டேன்.
கட்டிடங்களின் உறுதித்தன்மை அதன் வடிவமைப்பு என்னை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டியது மேலும் ஆங்காங்கே தனி தனியாக இருக்கும் வீடுகளில் அங்குள்ள ஆசிரியர்கள் வசிப்பதை கண்டவுடன் அவர்களின் துணிச்சல் தான் எனக்கு தெரிந்தது .
அதிக நபர்களின் வருகை நம் நடைவலத்திற்கு உற்சாகத்தைஅளித்தாலும் ஏனைய மரவட்டைப் பூச்சிகளை காலால் மிதித்து கொன்ற பாவம் அ(க)ண்ணனையே சேரும்.
குப்பை குவியல்கள் ,மதுபாட்டில்களின் சில்லுகள் " நாங்களும் இங்குள்ளோம் எங்களையும் கவனியுங்கள்" என்று முனுமுனுத்தன. ஏரி ,கிணறு , பன்றி வளர்ப்பு பண்ணை , பயிர் சாகுபடி , நான் காணாத பிறர் சொல்லி கேட்ட சூரிய மின் உற்பத்தி என அனைத்தையும் இக்கல்லூரி தன்னகத்தே வைத்துள்ளதை நான் மிக அழகு என்பேன்.
மிதிபட்ட மரவட்டை பூச்சிகளுக்காக வருத்தப்பட்ட வர்ஷா.
என் இரு கரங்களை பத்து நிமிடங்களுக்கு மேல் பிடித்து நடந்த கயல் மற்றும் இயல்.
கயலின் ஒரு கால் கொலுசு கீழே விழுந்ததை அறிந்தவுடன் அவளை பத்து நிமிடங்களாக அழைத்து வந்த என்னை கேட்பார்களோ! எனும் சிறு பதட்டம்.
என் பள்ளி ஆசிரியரின் விரல்களை போல் விரல்களையும் , தோற்றத்தையும் கொண்ட அந்த தமிழ் அய்யா.
ஜெய்பீம் பட நிஜ சந்துரு இங்குதான் படித்தார் எனும் புது செய்தி.
வந்திருந்த புது முகங்களின் மத்தியில் எனக்கு தெரிந்த முகங்களிலிருந்து மட்டும் வந்த புன் சிரிப்புகள்.
சரியாக மணி காட்டிய சூரிய கடிகாரம்.
ஆகியவை இன்னும் சில நாட்கள் என் மனதில் நிழலாடும்.
கட்டிடங்களை மட்டும் கண்ட மற்றவர்களின் கண்களுக்கு இப்பயணம் நிச்சயம் குளிர்ச்சியை தந்திருக்கும் என்று நினைக்கிறேன். கல்லூரியின் முக்கிய பகுதிகளை மட்டும் காட்டிவிட்டு மீதி பகுதியை பிறகு சுற்றிக்காட்டுகிறேன் என்று கூறி அ(க)ண்ணன் அழைக்கும்போது இது காடா கல்லூரியா எனும் சந்தேகத்துடன் வெளியேறினேன். - சத்யா 28/08/22
Comments
Post a Comment