Skip to main content

 செஞ்சி கோட்டையின் கட்டுமான பிரமிப்புகளை விளக்கிய வையவன் தோழரின் இணையருடன் ஒரு உரையாடல்.....

மதி தோழர் (நான்கு மாத தனித்தமிழுடன்)
நான்கு மாத குழந்தை தனித்தமிழுடன் செஞ்சி கோட்டை மேல் ஏறிய தோழர், ஒரு போட்டோ எடுங்க அண்ணா. பின்னர் எப்போதாவது இவள் வளந்தவுடன் “நாலாவது மாதமே செஞ்சி கோட்டை மேலே ஏறிட்ட நீ என்று சொல்லலாமில்லே..”
அவர்களோடு பேசி கொண்டிருந்தபோது அவர் மிக சுவாரசியமாக சொன்னவை-
கல்யாணம் ஆன உடனே ஒரு பண்ணையில் என் கணவர் வேலைக்கு சேர்ந்துவிட்டார். என்னை யும் அங்கே அழைத்து சென்று விட்டார். அவர் ஆரோவிலில் வேலை செய்து இயற்கை விவசாயம், மரபு கட்டுமானம் போன்ற திறமைகளை வளர்த்து கொண்டவர்.
அந்த பண்ணையின் சொந்தக்காரர் என்னிடம் எதையாவது எப்போதும் சொல்லி கொண்டிருப்பார். பற்பசை உபயோகிக்க கூடாது பல்பொடி தான் உபயோகிக்க வேண்டும், குளிப்பதற்கு சோப்பு கூடாது, கற்றாழை தேய்த்து குளிக்க வேண்டும், பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்ப கூடாது என்று. அப்போதெல்லாம் எனக்கு அவ்வளவு விவரம் தெரியாது, எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஆசை தான் எனக்கும் இருந்தது. புருஷன் ஒரு நல்ல வேலைக்கு போகணும், பிள்ளைகளை நல்லா படிக்க வைக்கணும்னு. அதனால் என்னடா இப்படி ஒரு இடத்திற்கு வந்து மாட்டிக் கொண்டோமே என்று பயமாக இருக்கும்.
“மாமா பாண்டிச்சேரியில் வகை வகையா மீன் எல்லாம் வாங்கி தருவேன் என்று தானே கல்யாணம் கட்டிகிட்டேன், நீ இப்படி காட்டிலே கொண்டு வந்து கோழி ஆடு பார்த்துக்க வச்சிட்டியே, போதாதற்கு இந்த கிழவன் வேற இத போடாத அத போடாத ன்னு சொல்லிகிட்டே இருக்கான். நாம இங்கேயிருந்து வேற எங்கையாவது போயி வேலை செய்து பொழச்சிகிலாமே! என்று நான் சொல்லுவேன்.
அதற்கு “இந்த நிலத்தில நாம இயற்கையோடு தற்சார்பா வாழலாம் இல்லனா மத்தவங்க மாதிரி ஏதோ வேலை செஞ்சோம் வாழ்ந்தோம்னு காலம் போயிடும் னு என் கணவர் எப்போதும் சொல்வார்”.
“நிலம் தானே வேணும்” உனக்கு என்று அங்கிருந்து எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என்று மனதில் ஒரு வைராக்கியம் கொண்டேன்.
சொத்தை பங்கு பிரிச்ச போது பெண்ணு க்கு சொத்து உரிமை இல்லை னு சொல்லிட்டாங்க என் சகோதரர்கள். “எனக்கு உங்க வீடு வாசல் எதுவும் வேணாம், ஒரு ஏக்கர் நிலத்தை மட்டும் கொடுத்துடுங்க நாங்க அதை வச்சு வாழ்ந்துக்குறோம்” என்று எப்படியோ அவர்களோடு சண்டை போட்டு இந்த நிலத்தை வாங்கினேன்.
ஒரு ஏக்கர் ல எங்களுக்கு என்ன தேவையோ அதை விளைவிச்சு கிட்டு நல்லா தான் போய்க்கிட்டுருந்தது. ஆனால் 2016ல வந்த வறட்சியில எல்லாம் பட்டு போச்சு. வாழ்வாதாரத்துக்கு நகரத்துக்கு (பாண்டிச்சேரி) போக வேண்டியதாயிடுச்சு.
ஊர்ல இருக்கும் போது எங்க தோட்டத்தில கிடைக்கிற கீரை, காய்கறி, குளத்திலே கிடைக்கிற மீன் என எங்கள் உணவுக்கான தேவை பெரும்பாலும் பூர்த்தி ஆகி விடும். நகரத்துக்கு போனவுடனே தான் புரிஞ்சிது இங்கு காய்கறி, தண்ணீ, படிப்பு, வீட்டு வாடகை, பிள்ளைகளின் படிப்பு என எல்லாத்துக்கும் காசு தான். ஏன் வீட்டு வாசல் ல கோலம் போடணும்னா கூட காசு கேட்டாங்க. வாங்கிற சம்பளம் பத்தாயிரத்தில ஒன்னும் கட்டுப்படி ஆகல. ஒரு வருடம் கழித்து நம்ம நிலத்திலேயே போய் பிழைத்து கொள்ளலாம் னு திரும்பி ஊருக்கே வந்துட்டோம். புன்னியத்துக்கு போன இரண்டு மூன்று வருடமா மழை பெய்ததினால நாங்க மீண்டும் தற்சார்பு வாழ்வை தொடர்வதற்கு ஏதுவாக இருந்தது.
என் அம்மா எனக்கு என்ஜினீயர் மாப்பிளைக்கு தான் கட்டி கொடுப்பேன்னு இருந்தாங்க. அதனால் என் கணவர் “நான் eco construction என்ஜினீயர் னு உங்க அம்மாகிட்ட போய் சொல்லு னு” சொல்வார். “இந்த மரபு கட்டுமானத்தில் வீடு கட்டுபவர்கள் எந்த வகையில் மற்ற கட்டிடங்களை கட்டுபவர்களை விட குறைந்தவர்கள்? என்று நானும் யோசிப்பேன்.
பயணங்கள் நம் வாழ்நாளில் குறைவானதாகவே இருந்தாலும் மற்ற அனுபவங்களை காட்டிலும் அவை மனதில் அழியா- நினைவுகளாக பதிந்துவிடுகின்றன. அது போன்ற பயணங்களில் எதேச்சையாக நாம் சந்திக்கும் சாதாரண மனிதர்கள், நாம் தேடிக்கொண்டிருக்கும் உண்மையை வெகு எளிதாக கூறி விட்டு சென்று விடுகிறார்கள். தன வாழ்க்கை கதையை அவ்வளவு சுவாரசியமாக வும் அழகாகவும் சொல்லியது மட்டுமில்லாமல் மலையில் ஏறி இறங்க துணையாகவும் இருந்த மதி தோழர் எங்கள் மனதில் நீங்காத நினைவுகளில் ஒன்றாக இருப்பார். - பாலமுரளி


Comments