Skip to main content

 நாம் முரணோடு வாழ சபிக்கப்பட்டவர்கள்..!

திடக் கழிவு மேலாண்மை வகுப்பு நடந்த அன்று அனைவருக்கும் மாலை 4 மணிக்கு தொடங்கி 7 மணிக்கு முடிந்த நிலையில் எனக்கு மட்டும் இரவு 12:30 மணி வரை நடத்தப்பட்டது . உணவு உண்ணும்போது , ஓய்வாக அமரும்போது , உறங்க படுத்து கொண்டிருக்கும்போது என அது பலநிலைகளில் நீண்டது. அதன் புரிதலை கற்பனை மற்றும் பயத்தில் கலந்து இங்கு பதிவிட விரும்புகிறேன்.
வகுப்பில் நுண்ணுயிரிகளின் அவசியத்தை பற்றியும்; நம்முடைய கழிவுகளை மேலாண்மை செய்வது பற்றியும்தான் நடத்தப்பட்டது. ஆனால் தற்போது நாம் வாழும் வாழ்க்கைமுறை அதில் பெரும்பங்கு வகிப்பதால் நான் வகுப்பின் தலைப்பிலிருந்து வெளியேறி கட்டுரையின் தலைப்பில் பயணிக்க தொடங்கிவிட்டேன்.
வாழ்வின் வெள்ளோட்டத்தில் நாம் அனைவரும் முரண்களுக்கு மத்தியில் வாழப்பழகி உள்ளோம். வளர்ச்சி, நவீனம், ஆடம்பரம் போன்றவற்றை பற்றிக்கொண்டு நாம் முன்னேறுகையில் அவற்றால் ஏற்படும் விளைவுகளை கவனிப்பதில்லை. பூமியின் எதிர்காலம் குறித்து மனதில் உள்ள கவலைகளை வார்த்தைகளில் உருவம் தர முயற்சிக்கிறேன் ஆனால் பேனாவின் முனைக்கு மூளையில் இருந்து உத்தரவு வரவில்லை . ஏனெனில் எதிர்காலம் குறித்து ஏனையோர் எச்சரித்த நிலையில் நான் மட்டும் புதிதாக கூற ஏதுமில்லை. அதுமட்டுமின்றி இதில் அறிவியலின் பங்கும் இருப்பதால் அது குறித்து ஆழமாக விவாதிக்க எனக்கு போதுமான அறிவில்லை .எனவே நான் கற்பனையை கையாண்டுள்ளேன் .
நாம் வாழும் இந்த நவீன வாழ்க்கையில் இருந்து திடீரென நம்மை விட்டு இந்த நவீனங்களை நீக்கி விட்டால் நம்மில் பெரும்பாலோனோர் விரக்தியில் மூழ்கி விடுவர் . காரணம் அந்த அளவிற்கு நம்மை நவீனம் பீடித்துள்ளது. முதலில் நவீனம் குறித்து எனது பார்வையை கூறிவிடுகிறேன் . நவீனம் இல்லையெனில் நாம் இருட்டிலேயே வாழ்ந்து ; பிறந்த இடத்திலேயே இறந்து ; கற்கருவிகளை மட்டும் பயன்படுத்தி ; களிமண் மற்றும் கரித்துண்டில் மட்டும் எழுதி ; காசம்,போலியோ , அம்மை போன்ற நோய்களில் சீர்குலைந்து சொல்ல முடியாத நிலைகளில்தான் இருந்திருப்போம். எனவே என் சாடல் நவீனம் குறித்து அல்ல. ஆனால் அதே நவீனம் ஆடம்பரத்தை பிள்ளையாக பெற்று நம் கைகளில் கொடுத்தபோது அதற்கு கெளரவம் என துணை பெயர்சூட்டி வளர்த்து வருகிறோமே அது குறித்துதான். இனி கற்பனைக்குள் செல்வோம்.
பழுது பார்ப்பதற்காக ஒருநாள் மின்சாரத்தை நிறுத்தி விட்டாலே "அய்யோ இன்னைக்கு ஷட்டௌனா..???" எனும் வார்த்தையில் தொடங்கி "அப்பா கரண்ட் வந்துடுச்சு.. "எனும் வார்த்தையில் அந்த நாள் முடியும்.
அதுவே
• அந்த ஒரு நாள் ஒரு வாரமானால் ....!!!??
• அந்த ஒரு வாரம் ஒரு மாதாமானால் ....!!!??
• அந்த ஒரு மாதம் திடீரென நிரந்தரமானால் ....!!!??
நிலைமை என்னவாகும் என யோசியுங்கள் . இந்நிகழ்வை survival family எனும் ஜப்பானிய திரைப்படம் விரிவாக கூறியுள்ளது என இஸ்மாயில் அண்ணா எனக்கு அறிமுகப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக மற்ற பொருட்களை என் மனம் கற்பனை செய்து பார்த்தது.
பேருந்து ,இருசக்கர வாகனம் ,பற்பசை ,சோப்பு , அழகு சாதன பொருட்கள், ஆடைகள், நொறுக்கு தீனிகள், கைபேசி, கணினி, காலணிகள், உணவு சமைக்கும் பாத்திரங்கள், பாலிதீன் பொருட்கள், மருந்து பொருட்கள், எரிவாயு உருளை, மின்விளக்குகள், மின்விசிறி, செய்தி தாள்கள், படிப்பதற்கு தேவையான பொருட்கள் போன்ற பெரும்பாலானவை நமது அன்றாட வாழ்வின் அத்தியாவசியமானவை. இவைகளில் ஏதாவது ஒன்று ஒரு நாள் இல்லையென்றாலும் அன்று முழுவதும் நாம் சிரமத்தை எதிர்கொள்கிறோம். அதுவே நிரந்தரமானால் நம் நிலை என்னவாகும் ....!!!??
இவைகளை ஈடு செய்ய அரசு தன்னாலான கடமைகளை செய்து வருகிறது. ஒருவேளை அரசாலும் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டால்...!!! இலங்கை நிலைமைதான் நமக்கும் என சிலர் எண்ணுவீர்கள் ; அவர்களுக்கு கொடுத்து உதவ பூமியின் பெரும்பாலான பகுதிகள் (நாடுகள்) தற்போது செழிப்பாக உள்ளன. ஆனால் இந்நிலை பூமியெங்கும் வியாபித்தால் ....!!!?? அதில் நாமோ நம் தலைமுறையோ சிக்கி கொண்டால் ....!!!?? எனக்கு இதை யோசிக்கும்போது நெஞ்சு பாரமானது.
பின்குறிப்பு: மேற்கூறிய பொருட்களில் ஆபரணங்கள், மகிழுந்து, குளிர் சாதன பெட்டி, அதீ நவீன கைபேசி, போதை பொருட்கள், விளையாட்டு சாமான்கள் போன்றவற்றை நான் இணைக்கவில்லை. இவைகளையும் அத்தியாவசியமாக்கி உள்ளவர்களின் நிலைமையை நினைத்தால் எனக்கு பரிதாபமாகவுள்ளது.
சில நொடிகள் வாசிப்பதை நிறுத்திவிட்டு மூச்சு வாங்கி கொள்ளுங்கள்.....
• மேற்கூறிய பொருட்கள் இன்றி நம்மால் வாழ முடியாதா ....!!!??
• இவைகளை கண்டுபிடிப்பதற்கு முன் எப்படி வாழ்ந்திருப்பார்கள் ....!!!??
• அத்தகைய நிலைமையை எதிர்கொள்ள நமக்கு நம் கல்வி முறை கற்று தந்துள்ளதா ....!!!??
• இவைகளை ஈடு செய்ய வேறு பொருட்கள் உள்ளனவா ....!!!??
• அவற்றை நம்மால் உற்பத்தி செய்ய முடியுமா ....!!!??
என கேள்விகளை நம்முன் கேட்க வேண்டிய நேரமிது.
இத்தகைய கேள்விகளை கேட்டுக்கொண்டவர்கள் பெரும்பாலோனோர் அ(க)ண்ணனுடன் தொடர்பில் உள்ளார்கள் என்பது ஆறுதல் அளித்தாலும் ; அது முறையாக அடுத்த தலைமுறைக்கு கற்பிக்கப்பட்டுள்ளதா என எண்ணும்போது அங்கு தொய்வு ஏற்படுகிறது. காரணம்:- மக்களுக்கு முன் வந்து கற்க ஆர்வமில்லை என்பது ஒருபுறமிருக்க - ஆடம்பரம் இல்லாத வாழ்க்கையை ஏளனமாக பார்க்கும் சமூகம் மறுபுறம் நிற்கிறது. மேற்கொண்டு புரிந்து கொள்ள கற்பனையாக ஒரு பயணம் செய்யலாம் வாருங்கள்.
தற்சார்புவாதிகளும் தற்பெருமைவாதிகளும் ஒரே சமயத்தில் இரு வேறு பாதைகளில் பயணம் செய்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். தற்சார்பு வாதிகளின் பாதை பச்சை நிறமும் தற்பெருமைவாதிகளின் பாதை சிவப்பு நிறமும் பூசப்பட்டுள்ளது. சிவப்பு நிற பயணிகள் ஆடம்பர வாழ்க்கையில் பிணைந்தவர்கள்; பச்சை நிற பயணிகள் இயல்பான வாழ்க்கையில் பிணைந்தவர்கள். ஒரு கட்டத்தில் சிவப்பு பாதை முடிந்துவிடும் பச்சை பாதை தொடர்ந்து கொண்டே இருக்கும்.சிவப்பு நிற பயணிகளின் தலைமுறை பாதை முடிந்தவுடன் பயணிக்க தடுமாறுவார்கள். காரணம் அந்த பாதை யாரோ ஒருவரால் அவர்களுக்கு அமைத்து தரப்பட்டது. அதில் சௌகரியமாக அவர்கள் பயணம் செய்து விட்டார்கள். எனவே அவர்களுக்கு பாதை அமைக்க தெரியாது. ஆனால் பச்சை நிற பாதை இயற்கையால் அமைக்கப்பட்டது; அதன் நீளம் மிக அதிகம். அந்த சிவப்பு நிற பயணிகளின் தலைமுறை இறுதியில் பச்சை நிற பாதையைத்தான் தேர்ந்தெடுத்தாக வேண்டும். அதன் முயற்சியாக சிவப்பு நிறப்பாதையிலுருந்து பச்சைநிறப்பாதைக்கு பாலம் அமைக்க அவர்கள் நிச்சயம் திணறுவார்கள். இறுதியில் பச்சை நிறப்பாதைதான் தொடரும். ஆனால் இங்கு முரண் என்னவெனில் சிவப்பு நிற பாதையில் ஏற்படும் அதிர்வு; பச்சை நிறப்பாதையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதன் விளைவாக இயல்பான வாழ்க்கையில் சமநிலை பாதிக்கப்படுகிறது.
இந்த பயணத்தை சுவாரசியமாக சொல்ல எனக்கு தெரியவில்லை. ஆனால் கரு புரிந்திருக்கும் என நான் நினைக்கிறேன். அதன் அதிர்வை குறைக்க இங்கு சில கற்பனைகளை சிந்தித்து பார்ப்போம்.
• ஒரு வேளை அரசு உற்பத்தி மற்றும் பயன்பாட்டை முறைப்படுத்திவிட்டால்....!!!??
• ஒருவேளை மக்கள் நுகர்வு மாயையிலிருந்து வெளி வந்துவிட்டால்....!!!??
• இயற்கைக்கு அபாயமான சௌகரிய பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்திவிட்டால்...!!!??
• பொது போக்குவரத்தை முறைப்படுத்திவிட்டால்....!!!??
• தண்ணீரின் சிக்கனம் குறித்த அவசியத்தை அனைவரும் உணர்ந்துவிட்டால் ....!!!??
• வேலைவாய்ப்பிற்காக பிறரையும் , அரசையும் மட்டும் நம்பி இருக்கக்கூடாது என மக்கள் தெளிவடைந்துவிட்டால் ....!!!??
• விவசாயம் நம் வாழ்வின் ஒரு அங்கம் என்பதை உணர்ந்துவிட்டால்....!!!??
• விவசாயம் செய்ய வாய்ப்பற்றவர்கள் அதற்கான ஆதரவு அவசியம் என்பதை உணர்ந்துவிட்டால்....!!!??
• மரம் மற்றும் காடுகளின் இருத்தலை இன்ப வாழ்வியலின் ஒரு அங்கம் என்பதை உணர்ந்துவிட்டால் ....!!!??
இவ்வாறு ஏனைய தன்னுணர்வுகளை மக்கள் உணர்ந்துவிட்டால் சிவப்பு நிற பயணிகள் பாதை முடிந்தாலும் சமாளித்து விடுவார்கள் என்பது எனது அனுமானம்.
தற்காலத்தில் தொலைக்காட்சி விளம்பரங்கள் நம் உளவியலை முழுமையாக ஆராய்ந்து வெளியிடப்படுகின்றன. அவைகளில் வரும் பொருட்களை நம் வீடுகளில் வாங்கி குவிப்பதை நோக்கமாக கொண்டிருக்கும்பட்சத்தில் ....!!!, ஆடம்பர பொருட்களை அத்தியாவசியமாக்கி வரும்பட்சத்தில் ....!!!
மேற்கூறிய கற்பனை பயணம் ஒருநாள் அரங்கேறும். அதில் நாமோ நம் தலைமுறையோ நிச்சயமாக சிக்கிக்கொள்வோம்.
அதுவரை இயற்கை வாழ்வியலின் மீது உடன்பாடு இருப்பினும் சமூகத்திற்காகவும், சௌகரியத்திற்காகவும் இயற்கையை எதிர்த்து முரணோடு வாழ நாம் சபிக்கப்பட்டுள்ளோம் .
நன்றி...



Comments