அகத்தீ உரையாடல் -2
டிசம்பர் 4, 2022.
ஓய்வு பெற்ற அரசு கல்லூரி முதல்வர் தோழர் சிவக்குமார்
எது கல்வி ? யாருக்கான கல்வி ? என்பதை பண்டைய மனித சமூக வரலாற்றிலிருந்து தொடங்கி பரிணாம வளர்ச்சியில் கற்றலின் தேவையை நடைமுறை வாழ்க்கையோடு பொருத்தி, நாகரிகங்களின் தாக்கத்திலிருந்து கல்வியில் ஏற்பட்ட மாற்றங்களை கோடிட்டு, காலனி ஆதிக்கத்தின் நீட்சீயில் முதலாளிதுவ சமூகத்தில் கல்வி எப்படி வணிகமாகவும், கல்வி கற்கும் மாணவர்கள் எப்படி பண்டமாக தங்களையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதை கூர்மையான உதாரணங்களோடு
சிறப்பாக விளங்கினார். இதற்கு பிறகு நடந்த உரையாடல் ஏராளமான விவாதங்களையும், தொழில் நுட்ப மாற்றங்களின் வேகத்தையும் புரிந்து கொள்வதற்கான தொடக்கமாக அமைந்தது.
Industry ( Education) 4.0, 5.0 - Data analysis -Artificial intelligence
____________
இன்றைய காலகட்டத்தின் போக்குக்கு கல்வி எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று விவரிகக்க தொடங்கினார் பேராசிரியர். கல்வி என்பது ஒரு தனி மனிதனின் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தும் வகையில் அமைய வேண்டும். விமர்சன அறிவு , கேள்வி கேட்கும் திறன், பகுத்து ஆராயும் பக்குவத்தை வளர்த்திருக்க வேண்டும் . மாறுதலாக இப்போதைய கல்வியானது Banking system போன்று அமைக்க பட்டுள்ளது. அறிவை Deposit செய்து அதில் லாபம் பார்க்கும் வணிகமாக்கப்பட்டுள்ளது. அதில் பயிற்சி பெரும் மனிதன் இந்த வாழ்வியலுக்கு ஒரு பண்டமே! இங்குள்ள நுகர்வு கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு நம்மை வடிவமைத்துள்ளது. இங்கு தரமான கல்வி என்ற பெயரில் நுகர்வு கலாச்சாரத்தை ஏற்படுத்தியது அயல்நாட்டு பெரும் முதலாளிகளே! இங்கு உள்ள பண்பு, இலக்கியம், வரலாறு போன்ற எதையும் அடிப்படையாக்காமல் நம்மை அடிமையாகவே வைத்திருக்கும் திட்டமே கல்விக் கொள்கைகளாக அமைக்கப்பட்டுள்ளது. கல்வியானது ஒரு ஆசிரியர் சொல்ல மாணவர் கேட்க வேண்டும் என்று இல்லாமல் கலந்துரையாடல் முறையில் அறிவு பரிமாற்றம் நடக்க வேண்டும். இவ்வாறே ஒரு மனிதன் தன்னிச்சையாக சிந்திக்கும்/ செயல்படுத்தும் ஆற்றலை பெற்றவன் ஆகிறான். இவரும் “Paulo Freire” யின் “Pedagogy of Oppressed” ல் சொல்லப்பட்டதை முன்மொழிந்தார் .
இந்த முதலாளி வர்க்க சமுதாயம் அமைய மக்களை சாதிய கட்டுமானத்தை வடிவமைத்து அதில் பல பேருக்கு கல்வி பெறும் உரிமையை வெறும் கனவாகவே ஆக்கப்பட்டது. இதில் பணம் படைத்தோரும் கல்வியை பெற பல மடங்கு பணத்தை அந்த பெரும் முதலாளிகளுக்கே கொடுத்து அந்த பெரும் முதலாளிக்கே பணி செய்யும் வாய்ப்பையும் பெறுகிறான். இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு கணினி பொறியியலாளருக்கு அடிப்படை அறிவானது எவ்விதமான கணினி ஆனாலும் அதை சரி செய்யும் அடிப்படை அறிவு அமைந்திருக்க வேண்டும்; மாறாக இவர்கள் அவர்களுக்கு மட்டுமே வேலை செய்வதற்கு specialisation என்ற பெயரில் ஒரு கம்பெனி இயந்திரத்தை சார்ந்தே அறிவுப் பணி புரிவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலையின் தேவை இல்லாமல் போனால் இங்கு படித்து வேலை வாங்கினோறும் ஒரு நாள் வேலையின்றி, பணம் இன்றி நிற்பார்கள்; கடந்த பத்து வருடத்தில் தரவு துறையில் பல மடங்கு மக்கள் பணி இன்றி நீக்கப்பட்டனர். வரும் காலம் மனிதனை சார்ந்து (Human Dependency) இல்லாமல் இயந்திரத்தை நம்பி (Automation) பயணிக்கும் காலமாக மாற்றப்படுகிறது. இதில் இயந்திரம் வேலையை செய்யும் மக்களுக்கு வேலை இல்லை. இயந்திரம் செய்ய இயலாத ஒன்றிற்கே மனிதன் தேவைப்படுகிறான். Survival of the fittest. இன்று எதையும் கேள்வி கேட்கும், சிந்திக்கும் சமுதாயமாக வெறும் இரண்டு சதவீதம் மக்களே இருக்கின்றோம். பிரச்சனை முற்றினால்தான் தீர்வு கிடைக்கும் என்று மிகவும் மன வருத்தத்துடன் கூறினார்.
அன்பு, அறம் என்பது இல்லாமல் வளர்ச்சி என்ற பெயரில் லாபகரமான சிந்தனையை வளர்த்து எடுக்கின்றது இன்றைய கல்வி முறை. இந்த கல்விமுறையானது அதிகாரம் என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு நடக்கும் முறையையே பயிற்றுவிக்கிறது, அதிகாரத்தை கேள்வி கேட்கும் திறன் இழந்தவர்கள் ஆக்குகிறது.
இதை தொடர்ந்து தோழர் பூபதி அவர்கள் செயற்கை நுண்ணறிவு (A.I), செயற்கை பொது நுண்ணறிவு (A.G.I),கிரிப்டோ(Block Chain),GIMS /GAN போன்ற விவரங்களை சுருக்கமாக பகிர்ந்து கொண்டார். இன்றைய காலகட்டமானது தரவுகளை (Data Dependency) சார்ந்தது. இருப்பினும் நம் மக்களுக்கு தரவுகள் துல்லியமாக வழங்கப்படுவது இல்லை. சில இடங்களில் தரவுகள் இல்லை என மறைக்கப்படுகிறது. தரவு சுதந்திரம் (Data Liberation) இல்லை. உதாரணத்திற்கு, மேலை நாடுகளில் ஒரு மருத்துவர் என்ன படித்திருக்கிறார்? அவர் பணியின் மதிப்பீடுகள் என்ன? அவர் செய்த அறுவை சிகிச்சையில் எவ்வளவு வெற்றி கண்டுள்ளார்? எவ்வளவு மரணம்? அதற்கு காரணம் என்ன? என்ற விவரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு தனி நபர்; தான் யாரிடம் சேவை/ சிகிச்சை பெற வேண்டும் என்ற சுதந்திரம் பெறுகிறார். இது தன்னுரிமை என்பது ஆகும். ஆனால் இங்கு நமக்கு வழங்கப்படாதது ஏன்? ஏன் தரவுகளில் வெளிப்படை தன்மை (Data Transperancy) இல்லை? போன்ற பல கேள்விகளும், பதட்டமும், குழப்பமும் மேலும் இதனை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்று இந்த கூட்டத்தின் முடிவில் பலர் உணர்ந்தனர்.
- திரு காப்பு
Comments
Post a Comment