Skip to main content

 நம் மரங்களை அறிவோம் - சிட்லபாக்கம் ஏரிக்கரை

நேற்று மரங்களை பற்றி தெரிந்து கொள்ள ஒரு நிகழ்வு சிட்லபாக்கம் ஏரிக்கரையில் மாலை ஏற்பாடு செய்யப்பட்டது. மரங்களை அடையாளப்படுத்துவது மட்டும் இல்லாமல், வரலாறு, சங்க இலக்கியம், மருத்துவ குணம், பண்பாடு, வழக்கு மொழியில் அதன் பெயர், பயன்பாடு என்று மிகவும் சுவாரசியமாகவும் சிறப்பாகவும் திரு ராமன் அவர்கள் விளக்கினார்.
நெய்தல் திணைக்கான புன்னை மரத்தை காட்டி அதை பற்றி சொல்லும் போது நற்றிணையில் இருந்து ஒரு பாட்டை மேற்கோள் காட்டினார். சிறுவயதில் விளையாட்டாக விதைத்து வளர்ந்த புன்னை மரத்தை காட்டி தன் அம்மா இது உன் தங்கை என்று சொல்லி வளர்க்கிறார். அவள் பெரியவள் ஆனதும் தன் காதலன் உடன் சிரித்துப் பேச புன்னை மரத்தின் நிழலில் அவன் ஒதுங்கும்போது, இது என் தங்கை இங்கு வேண்டாம் என்று அவள் தன் காதலனிடம் நாணத்துடன் சொல்லி வேறு ஒரு மரத்தின் நிழலுக்கு செல்வதாக சங்க இலக்கிய பாடலை மேற்கோள் காட்டினார். இதை கேட்கும் போது மெய்சிலிர்ந்து போனேன். பண்டைய தமிழ்ச் சமூகம் தங்கள் வாழ்க்கையின் எல்லா கட்டத்திலும் இயற்கையை முதன்மையாகக் கொண்டு வாழ்ந்துள்ளனர் என்பதற்கு ஒரு அழகான உதாரணமாக இருந்தது.
சங்க இலக்கியப் பாடல்களை மேற்கத்திய ஜாஸ் இசையோடு இணைத்து அழகாக பாடக்கூடிய சென்னை கிருத்துவ கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் நிர்மல் செல்வமணி அவர்களை பற்றியும், முன்னாள் தாவரவியல் துறை தலைவராக இருந்து மிக முக்கிய பங்காற்றிய பேராசிரியர் தயானந்தன் அவர்களைப் பற்றியும், இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருந்து மிக முக்கிய பங்காற்றிய புள்ளியல் துறை தலைவராக இருந்த கிப்ட் சிரோமணி அவர்களை பற்றியும் சொல்ல வாய்ப்பு கிடைத்தது.
வரும் தலைமுறைக்கு நம் மரபு அறிவை கை மாற்றுவதற்காகவாது இது போன்ற நிகழ்வுகள் நிறைய நடக்க வேண்டும்.
- பாரதி கண்ணன், தாம்பரம்

Comments