அகத்தீ
திட்டமிடாத ஒரு பயணம்
பேரையூர் மொட்டை மலை | மரபு கட்டுமானம்
கடந்த சனிக்கிழமை "தோழர் மதுரையில எங்க கல்யாணம் அப்படின்னு சொன்னீங்க ?"
"திருமங்கலம் பக்கத்துல பேரையூர்ல" என்று காஞ்சனா தோழர் சொல்ல
"என்னது பேரையூரா நானும் அங்க தான் இருக்கேன்... வந்துட்டு சொல்லுங்க தோழர்" என்றேன்
சூழலியல் மாற்று கல்வி சார்ந்த பயணத்தில் அறிமுகமான உசிலம்பட்டி பிரதிபா அவர்களுடைய மகன் திருமணத்திற்கு வந்திருந்த அகத்தி தோழர்களை பேரையூரில் உள்ள மொட்டைமலைக்கும், வைஷ்ணவியின் சொந்த கிராமத்தில் தம்பி பரத்தின் மேற்பார்வையில் கட்டிக் கொண்டிருக்கும் மரபு வீட்டுக்கும் அழைத்து சென்று காண்பித்தது எதிர்பாராத ஒரு நிகழ்வாக அமைந்தது.
"நுகர்வு வாழ்க்கை முறையின் குறியீடாக இப்போது நடக்கிற திருமணங்கள் மாறி உள்ள சூழ்நிலையில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு வருவதே சலிப்பாக இருக்கு. போன மாசம் கூட இதே ஊருக்கு இதே மண்டபத்துல இதே விடுதி அறையில தங்கிட்டு போனோம். அப்போ கூட நடக்கிற தூரத்தில் இவ்வளவு அற்புதமான ஒரு மலை இருக்கு பார்க்க முடியும்னு தெரியல. ரொம்ப மகிழ்ச்சி பாரதி இங்கே கூட்டிகிட்டு வந்து காட்டுனதுக்கு" என்று பிரியா அவர்களின் மன நிறைவை பகிர்ந்து கொண்டார்.
வந்திருந்த நம் தோழர்கள் அனைவரும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்டுமான வேலைகளை ஆர்வமுடன் பார்க்க
"தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் கம்பி சிமெண்ட் இவைகளுக்கு மாற்றாக நம்ம பகுதியிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து குறிப்பாக சுண்ணாம்பு வைத்து இந்த வீட்டை கட்டுகிறோம்...." என்று பரத் வந்தவர்களிடம் மரபு கட்டுமானத்தையொட்டிய தன் பயண அனுபவங்களை விளக்க அன்றைய நாள் நிறைவானது.
Comments
Post a Comment