Skip to main content

அகத்தீ - திணை வாழ்வியல்

 அகத்தீ

திணை வாழ்வியல்:

ஏரிக்கரைக் கலந்துரையாடல்
இடம்: சிட்லப்பாக்கம் ஏரிக்கரை
நேரம், நாள்: காலை 7 மணி,
ஞாயிறு, 17 செப்டம்பர், 2023
கலந்துரையாடல் பொருள் பற்றிப் பேசியவர்: பேராசிரியர் நிர்மல் செல்வமணி
உரையைத் தொகுத்து வரைந்தவர்:
தோழர் காஞ்சனா
ஞாயிற்றுக்கிழமை 17/ 9/23 அன்று ஐயா நிர்மல் செல்வமணி அவர்களுடன் சிட்லபாக்கம் ஏரிக்கரையில் நடந்த உரையாடலின் தொகுப்பு.
நமது காலத்தில் நாம் விரும்பித் தேடுகின்றவைகளைப் பற்றி நமக்கு எடுத்துச் சொல்ல நம்மிடையே உள்ள மிகப்பெரிய ஓர் ஆளுமை நிர்மல் ஐயா அவர்கள். அவர்களை அழைத்து வந்ததற்கு பாரதி தோழருக்கு நன்றி.
திணை வாழ்வியலே அன்றைய கலந்துரையாடலுக்கு ஐயா எடுத்துக்கொண்ட பொருள். திணை என்றால் என்ன என்பதை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கிச் சொன்னார். “இணை” என்பதே திணையின் அடிப்படை என்றும் “இணை” என்றால் இசையில் ச-ப சுர உறவு என்றும் கணவன்-மனைவி உறவு என்றும் விளக்கினார்.
(பாரதி- வைஷ்ணவி தோழர் இணை ஏற்பு விழா எனத் தம் திருமண ஆண்டு விழாவைச் சரியாகக் குறிப்பிட்டுள்ளனர் என நிர்மல் ஐயா பாரதியைப் பாராட்டினார்).
நிலமும் பொழுதும் மனிதனும் அனைத்து உயிரிகளும், தெய்வமும் செம்மையாக இணைந்திருக்கும் நிலையே திணை என்றும் அந்நிலையைச் சிதைக்காது வாழ்வதே திணை நெறி என்றும் விளக்கினார். திணை வாழ்வியலுக்கு அன்பு தான் அடித்தளமாக அமைகிறது என்றும் அன்பின் அடிப்படையில் அறத்துடனும், பொருளுடனும் இன்பமாக வாழ்வதே அவ்வாழ்வு என்றார். இதற்குச் சான்றுகளைத் தொல்காப்பியத்திலிருந்தும் சங்கப் பாடல்களில் இருந்தும் காட்டினார். தன் தோழியருடன் கிழத்தி விளையாடும் போது மறந்து விட்டுச்சென்ற புன்னை விதை முளைத்து மரமாக வளர்கையில் எவ்வாறு கிழத்தியின் தாய் அம்மரத்தை அன்புடன் நெய், பால் ஊட்டி வளர்த்தாள் என்றும் அம்மரத்தைக் கிழத்தியின் தமக்கை என்று உறவு கூறி புன்னைத் தமக்கையே கிழத்தியைக் காட்டிலும் சிறந்தவள் என்று கூறினதையும் திறம்பட எடுத்துச்சொன்னார்.
கடந்த 400 ஆண்டுகளாகத் தொழில் புரட்சியைத் தொடங்கி மனிதன் தன்னை மையப்படுத்தித் திணையை அழிக்கத் தொடங்கினான் என்றும் அத்திணை வாழ்க்கையை மீட்டெடுக்க 1980 இல் சென்னையில் “திணை” என்ற பெயரில் ஒரு குழு அமைத்துத் திணையே இப்போதுள்ள பெருந்தொழில் வாழ்க்கை முறைக்குச் சிறந்த மாற்று வாழ்க்கை நெறி (alternative social order) என்று எடுத்துரைத்து வந்ததை நினைவு கூர்ந்தார். அக்குழுவின் செயல்பாட்டால் இப்போது திணை ஓர் இயக்கமாக மாறி உள்ளதென்று குறிப்பிட்டார். இந்தியாவில் “இக்கோகிரிட்டிசிசம்” (Ecocriticism) என்ற பல்கலைக்கழகப் பாடமே இந்த திணைக் குழுவில் இருந்து பிறந்தது என்றும் தமிழ் இசையியலில் “திணை இசையியல்” என்றதொரு கிளைத்துறையும் இக்குழுவிலிருந்து கிளைத்ததுதான் என்றும், 1980களில் இந்நாட்டில் தோன்றிய இரு கோட்பாடுகளில் ஒன்று செல்வமணி அவர்கள் தோற்றுவித்த “புத்திணை” (முன்னர் வழங்கிய பெயர் Oikopoetics) என்பது என்றும் அதைத் தோற்றுவித்ததில் திணைக் குழுவிற்குப் பங்கு உண்டு என்றும் எடுத்துச் சொன்னார்.
ஏரிக்கரை உரையாடலுக்கு வந்திருந்த நண்பர் ஒரு கேள்வி எழுப்பினார். காடுகளை அழிக்காது பயிரை எப்படி வளர்ப்பது? விவசாயின் நிலைமை என்னவாகும்? என்றார். அதற்கு விடையாகத் தனது தாத்தாவும் பாட்டியும் வாழ்ந்த வாழ்க்கை முறையை மாற்றாகக் காட்டினார். உணவிற்குப் பணப் பொருளாதாரத்தையே பயன்படுத்தாமல் தம் விளையில் உள்ளவற்றைக் கொண்டே அவர்கள் வாழ்ந்ததை விவரித்துச் சொன்னார். தற்காலத்தில் உணவைச் சேகரித்தே வாழ்வதற்கான முயற்சியை மக்கள் மேற்கொள்வதையும் சுட்டிக்காட்டினார்.
சிட்லப்பாக்கம் ஏரிக்கரையில் நடந்திருக்கும் மாற்றங்களைக் கண்டு மிகவும் மகிழ்ந்து அதற்காக உழைத்தவர்களைப் பாராட்டினார்.
வந்திருந்த தோழர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் நிறைய கற்றுக் கொண்டதாக தெரிவித்தனர். அவர்கள்
* தமது குழந்தைகளுக்கு எடுத்துச் செல்வது;
* திணை வாழ்வியல் சம்பந்தமான தமிழ்ப் பாடங்களை இன்னும் ஆழமாக உள்வாங்குவது,
* அன்பு தான் நமது வாழ்வியலின் அடிப்படை என்பதைப் புரிந்து கொள்வது,
* திணை வாழ்வியலை மீட்டுருவாக்கம் செய்வது
போன்ற கருத்துகளைக் கலந்துரையாடலுக்கு வந்திருந்த நமது தோழர்கள் பதிவு செய்தனர்.
- நிகழ்வில் ஐயா தனது காந்தக் குரலில், அருமையான தமிழில் பாடிய சங்கப் பாடல் செவிக்கு நல்ல உணவாயிற்று.
மகிழ்ச்சியோடு கலைந்தோம்.
- நிர்மல் அய்யாவுடன் கலந்துரையாடியது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அவருடைய கருத்துக்கள், செய்திகள் இன்றியமையாதவை.
நிர்மல் ஐயாவேடு இனிமேலும் பல கூட்டங்களில் கலந்து உரையாடலாம் என்று தீர்மானம் செய்து அன்றைய கூட்டத்தை நிறைவு செய்தோம். நிர்மல் ஐயாவுக்கும் பாரதிக்கும் நன்றிகள் பல.
_________________________
திணை கோட்பாடும் இன்றைய பொருத்தப்பாடும்
சங்க காலத்தில் நானிலமாக பிரித்து, அதற்கேற்ப வாழ்வியலை அமைத்த தமிழ்ச் சமூகம் அதை சங்க இலக்கியம் என்று சொல்லபடுகின்ற பாடல்கள் மூலமாக ஆவணபடுத்தி உள்ளனர். திணை வாழ்வியல் வேத காலகட்டதுக்கு முந்தையது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம்,
• பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு என்கிற சாதிய கட்டமைப்பு என்பது அப்போது அறவே இல்லை.
• ஆண் பெண் பேதம் என்பது இல்லை. கிழவனும் கிழத்தியும் பாடல்களில் இணைந்தே இருப்பர்.
• குடி தலைவனுக்கு நிகராக சமானிய மக்களின் வாழ்வியலை பற்றி மிகவும் அழகியலோடு பதிவு செய்திருப்பர்.
• வேற்று மொழியின் தாக்கம் இல்லாத அழகிய தமிழை சங்க இலக்கியத்தில் பார்க்கலாம்.
• இவை எல்லா வற்றுக்கும் மேலாக இயற்கையை மையமாக வைத்து எழுதி இருப்பர். மனிதன் இயற்கையின் ஒரு அங்கமே என்பதை பல பாடல்களில் சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார்கள்.
























Comments