அகத்தீ-ஒன்றுகூடுகை
அகத்தீ அறக்கட்டளையாக பதிவு செய்த பின் ,ஒரு ஞாயிறு காலை அக்குழு கூடி அகத்தீயின் செயல்பாடுகள் ,அறக்கட்டளையாக பதிவு செய்ய வேண்டிய தேவை ,எதிர்கால செயல்பாடுகள் என கலந்துரையாடியது.
கிழக்கு தாம்பரத்தில் தோட்டத்துடன் கூடிய ஒரு வீடே அகத்தீ உருவாக காரணம். அவ்வீடு , பல ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் மாற்று சிந்தனையுடைய இளைஞர்கள் சந்திப்பதற்கும் ,தங்குவதற்கும், விவாதிப்பதற்கும் ஒரு தளமாக அமைந்தது .சமூகம் ,பண்பாடு , இயற்கை விவசாயம் , சுற்று சூழல் , தற்சார்பு வாழ்வியல், அரசியல், சிறார் களம் என பல்வேறு தளங்களிலும் அகத்தீ செயல்படுகிறது .
காலநிலை மாற்றத்தாலும் ,சமூக-அரசியல் சிக்கல்களாலும் நெருக்கடிக்குள்ளாகும் நம் வாழ்வை அவதானிக்கவும்,மாற்றவும் , முன்னேற்றவும் அகத்தீ போன்ற அமைப்புகளின் தேவையுள்ளது . சிறுவர்கள் , இளைஞர்கள் , பெண்கள் உள்ளிட்ட சமூகத்தை பல நிலைகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாற்றத்தை விதைக்கவும் ,செயல்திறனை ஊக்குவிக்கவும் அகத்தி ,அகத் தீயாக மறுவி கூடுதல் வேகத்தோடு அமைப்பாக செயல்பட , அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டுள்ளது .
பல்வேறு தளங்களிலும் , தேவையை ஒட்டி செயல்பட இருப்பதால் , அகத்தீயை ஒரு சட்டத்துக்குள் வரையறுக்க முடியாது. தாம்பரத்தைச் சேர்ந்த ஒரு குழுவின் (community) செயல்பாடு என அகத்தீயை கூறலாம் என்கிறார் அதன் தலைவரும் , ஒருங்கிணைப்பாளருமான பாரதி கண்ணன் .
மாற்றத்தை விரும்பும் இளைஞர்களுக்கு வழிகாட்டவும் , அவர்களுக்கு ஆதாயப்பகுப்பு (fellowship) பெற்றுத்தரவும் அகத்தீ துணை நிற்கும். தேர்ந்தெடுக்கப்படும் திரைப்படங்களை திரையிடலும், புத்தக அறிமுகமும் அதைத் தொடர்ந்து கலந்துரையாடலும் செய்வதென யோசனை செய்யப் பட்டது. வரும் மாதத்தில் குடும்பமாக ஒன்று சேர்ந்து அகத்தீயின் அடுத்தக்கட்ட நகர்வுகளை குறித்து கலந்து பேசவும் முடிவு செய்யப்பட்டது.
Comments
Post a Comment