Skip to main content

விதைபந்துகளை கையில் எடுப்போம் !

விதைபந்துகளை கையில் எடுப்போம் !

விதைப்பந்து இன்று பரவலாக நாடு முழுவதும் அறியப்பட்டு மக்கள் அதை கையில் எடுப்பதற்கு மிக முக்கிய காரணம் தோழன் ஜனகன் @janakan. இதில்'அகத்தி' தோட்டத்தின் பங்கும் குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களில் விதைப்பந்துகள் பற்றிய கேள்விகளும் விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கும் சூழலில், எந்த புரிதலின் அடிப்படையில் விதைய்பந்துகளை கையில் எடுத்தோம் என்பதை இங்கு பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளோம்.

விதைப்பந்து வளருமா வளராதா நம் நிலப்பரப்புக்கு அது தேவையா இல்லையா, பொருந்துமா பொருந்தாதா என்பதை அனுபவத்திலிருந்து அதன் சரி தவறுகளை புரிந்து பகிர்ந்து கொள்வது அவசியம். ஆனால் மரங்களை வளர்ப்பதில் விதைபந்துகளே தீர்வு என தட்டையாக புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல்களும் கிராமங்களில் இதை வரட்டுத்தனமாக நடைமுறைப்படுத்துவதும் 
இன்றைய சூழலில் விதைபந்துகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வதில் பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

 நாம் ஏன் விதைப்பந்துகளை தொடர்ச்சியாக கையில் எடுக்க வேண்டும் என்றால் ?

மண்ணை தொடுவது கெட்ட பழக்கம் கிருமிகள் வரும், அது அழுக்கு என்று ஆழமாக நகரங்கள் என்னும் நரகங்களில் நம்பப்படும் சூழலில் கடற்கரை மண்ணை தவிர்த்து மண்ணோடு விளையாடுவது என்பதே சென்னை போன்ற நகரங்களில் இல்லாத சூழலில், விதைப்பந்துகள் செய்யும் போது தான் பல குழந்தைகள் முதல் முறையாக மண்ணை தொட்டு விளையாடுவதற்கும் மண்ணோடு அறிமுகம் ஆவதற்குமான ஒரு வாய்ப்பைக் கொடுத்தது. குழந்தைகளுக்கான மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு மண்ணோடு விளையாடுவதும் அவர்களுக்கான தீர்வை கொடுக்கும் என்பது ஒரு ஆய்வின் முடிவு என்பது தனிக்கதை. இயற்கையிடம் இருந்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டு களவாடப்பட்ட நகரங்களில் வாழும் எதிர்கால தலைமுறையே விதைப்பந்துகளின் பிரதான இலக்கு.

முளைத்தால் மரம் இல்லை என்றால் மண்ணுக்கு உரம்

 விதை பந்துகளை செய்வதற்காக நாம் எடுக்கும் முயற்சி இந்த பயணத்தில் பல விதமான விதைகளை சேகரித்து அதைப் பற்றி தெரிந்து கொள்ளகிறோம். இதுவரை கேட்காத பார்க்காத விதைகளை தொட்டு உணர்ந்து நெகிழ்ந்து மனதில் ஆழமாக அதை பதிவு செய்வதற்கான வாய்ப்பாக இருக்கிறது. இன்றைய சூழலில் விதைகள் பற்றிய பாரம்பரிய அறிவை அடுத்த தலைமுறைக்கு கை மாற்றுவதற்கான வாய்ப்பு விதைப்பந்துகளை உருட்டுவதில் உள்ளது. இதுவே பலருக்கு திருப்புமுனையாகவும் விதைகள் சார்ந்த தொடர்ச்சியாக இயங்குவதற்கான தொடக்கமாகவும் அதில் அவர்களை கை தேர்ந்தவர்களாகவுகம் நிபுணர்களாகவும் மாற்றியிருக்கிறது. பல பள்ளி, கல்லூரிகள், பல்கலைகழகங்கள் கற்று கொடுக்காததை விதைபந்து நிகழ்வுகள் கற்று கொடுத்து கொண்டுள்ளது.

விதைப்பந்துகள் செய்வதையும் பரவலாக்குவதையும் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவோம்
 
மரபு விதைகளை கைமாற்றுவதை குற்றமாகி ஒட்டுமொத்த இயற்க்கையின் விதிக்கு எதிராகவும் பல்லுயிர் சூழலுக்கு ஆபத்தாகவும், உணவு உற்பத்தியை பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி பல ஆயிரம் தலைமுறைகளாக விதைகளை கைமாற்றி வந்த விவசாயிகளை குற்றவாளிகளாக்கி, மரபணு மாற்றப்பட்ட மலட்டு விதைகளை உற்பத்தி செய்து லாபம் கொழிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும் மிகவும் மோசமான 2004 விதை சட்டத்தை பற்றி பரவலாக பேசுவதற்கான களமாகவே இதுவரை நாங்கள் ஒருங்கிணைத்த விதைப்பந்துகளுக்கான அனைத்து நிகழ்வுகளும் அமைந்தது. இதை சொல்வதற்காக மட்டுமே விதைப்பந்துகளை நாம் ஒரு மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும். இதை புதுப்பித்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு போவதற்கான தார்மீக கடமை இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்க கூடிய ஒவ்வொருவருக்கும் உண்டு.

ஆழமாக விதைப்போம் மண்ணில் மட்டும் அல்ல, மனித மனங்களிலும் !

விதைப்பந்துகள் மண்ணில் வளர்வதுடன் மனித மனங்களில் இயற்கை பற்றிய புதிய ஆழமான பார்வையை விதைத்து வளர்வதற்கான தூண்டுகோலாகவும், இயற்கையுடன் அவர்களை ஒரு படி நெருக்கம் ஆக்குவதற்கான முயற்சியாகவும் இருந்திருக்கும் என்றால் அது மிகையல்ல. இதன் மூலம் ஒத்த சிந்தனை கொண்ட நட்பு வட்டங்களை புதிய உறவுகளை விதைப்பந்து நிகழ்வு தொடர்ச்சியாக உருவாக்கி அதை வலுப்படுத்தி அழகாகவும் மாற்றியுள்ளது.
இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் கூற்றுப்படி வரும் காலத்தில் விதைகளேயே பேராயுதமாக எடுக்க வேண்டி வரும், அன்பின் மீது ஒரு சமூகத்தை கட்டியமைக்க. 

2019

https://m.facebook.com/story.php?story_fbid=537842346605443&id=172954129760935

Comments