Skip to main content

அகத்தீ - சூழலியல் பயணம் - பச்சை மலை ஏற்றம்

 அகத்தீ - சூழலியல் பயணம்.

கடந்த நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை அன்று அகத்தீ ஏற்பாடு செய்திருந்த "நமது கூட்டு எதிர்காலத்திற்கான சிறார்கள்" பயிற்சியின் ஒரு பகுதியாக தாம்பரம் வரலாற்றை தெரிந்து கொள்ள சுற்றுசூழல் பயணம் ஒன்றை மேற்கொண்டோம். இதில் 35 குழந்தைகளும் 30 பெற்றோர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
பச்சை மலை ஏற்றம்
நாங்கள் அனைவரும் பச்சை மலை அடிவாரத்தில் காலை 7.00 மணிக்கு கூடினோம். கடந்த வாரம் நடைபெற்ற இணையதள வகுப்பில் நண்பர் தமிழ்தாசன், நம்மை சுற்றியுள்ள இயற்கைச் சூழலில் நாம் கவனிக்க வேண்டியவை குறித்து சில அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்கியிருந்தார்.
பச்சை மலையில் அமைந்துள்ள பல்லுயிர், அங்கிருந்து காணப்படும் நீர்நிலைகள், மலைகள் மற்றும் சுற்றியுள்ள ஊர்களை சிறுவர்கள் ஆர்வத்துடன் கவனிக்க அவர்களுக்கு நினைவூட்டினோம். அவர்கள் பார்த்ததை பற்றி சுவாரசியமான உரையாடல் நடந்தது. பச்சை மலையின் பெயர் காரணம் மற்றும் தாம்பரம் வரலாற்றை பற்றி சுருக்கமாக பாரதி பேசினார். நித்யானந்த் அவர்கள் பறவைகள் பற்றி பகிர்ந்து கொண்டார். வெளிநாட்டு பறவைக்கும் உள்நாட்டு பறவைக்கும் உள்ள வேறுபாட்டை கேட்க, குழந்தைகள் அதை பற்றிய தெளிவை பெற்றனர். புதிய மற்றும் சுவாரஸ்யமான ஒன்றைக் கற்றுக்கொள்ளும் போது அவர்கள் முகங்களில் ஒரு உற்சாக உணர்வைக் காண முடிந்தது. "மண்ணை நம்பி ஏலேலோ விதை இருக்கு" என்ற பாடலுடன் மலையேற்றதை முடித்தோம்.
பிறகு பாரதி தோழரின் வீட்டில் காலை உணவுக்குக் கூடினோம். அது ஒரு எளிய மற்றும் சுவையான காலை உணவு. வயிற்றை பசியாற்றிய பிறகு, நம் குழந்தைகளின் செவிக்கு உணவளிப்பதாக இருந்தது கார்லி பள்ளியின் முன்னாள் தமிழ் ஆசிரியர் வெஸ்லி அவர்களின் அனுபவ பகிர்வு. தாம்பரத்தில் வாழ்ந்த கற்கால மனிதர்களைப் பற்றி குழந்தைகளிடம் சிறு உரை நிகழ்த்தினார். அவர் சில கற் கருவிகள், கல்லில் அரைக்கும் கருவிகள் போன்றவற்றைக் காட்சிப்படுத்தினார். குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன், பண்டைய காலத்தில் இந்தக் கருவிகள் எப்படி இவ்வளவு துல்லியமாகத் தயாரிக்கப்பட்டன என்று ஆச்சரியப்பட்டனர்.
சேலையூர் குளம் -
அடுத்ததாக நாங்கள் ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல்லவ மன்னர் மகேந்திரன் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்ட சேலையூர் குளத்தில் உள்ள கல்வெட்டை காணச் சென்றோம். தமிழ் மொழியின் ஆரம்பகால கல்வெட்டுகளை குழந்தைகள் அங்கு கண்டனர். அன்று அது வறட்சியான பகுதியாக இருந்த காரணத்தினால் இந்தக் குளம் குடிநீருக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தது. இங்கிருந்து கல்லுக்குட்டையில் சிலைகள் செய்து பல்லவர்களின் தலைநகரமான காஞ்சிபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தரவுகள் உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதிக்கு சிலையூர் என்ற பெயர் வந்தது. அது பிற்காலத்தில் மருவி சேலையூராக நிலை பெற்றது என்ற மிகவும் சுவாரசியமான தகவலை ஆசிரியர் வெஸ்லி அவர்கள் பகிர்ந்து கொண்டார்.
அனுபவ பகிர்வு
பெற்றோர்களும் குழந்தைகளும் பகிர்ந்து கொண்டவை
"ஏராளமான தகவல்கள் இன்று தெரிந்து கொண்டோம். தாம்பரத்திற்கு நீண்ட வரலாறு இருப்பது ஆச்சிரியமாக உள்ளது."
" என் பள்ளி படிப்பு தொடங்கி நான் தாம்பரதில் தான் வசிகிறேன். ஆனால் இப்போது தான் முதல் முறையாக பச்சை மலைக்கு வருகிறேன். இந்த சேலையூர் குளத்தில் விளையாடியிருக்கிறேன் ஆனால் இந்த கல்வெட்டுகளை இது நாள் வரை கவனித்ததுயில்லை"
"குழந்தைகள் பள்ளியில் வரலாற்றைப் படிக்கிறார்கள, அதைநாம் வாழும் சுற்றுப்புறத்துடன் தொடர்பு படுத்துவதில் இடைவெளி உள்ளது. நாங்கள் வசிக்கும் இடத்தின் வரலாற்றைப் பற்றி அறிய உதவிய இந்த வாய்ப்பிற்கு நன்றி". - காஞ்சனா
சூழல் சார்ந்த பயணங்களை தாம்பரம் சுற்றுவட்டாரத்தில் செல்ல விரும்புவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்.

Comments