அகத்தீ- நீர்நிலைகளை பாதுகாக்க மிதிவண்டி பயணம் - தாம்பரம்
2015 டிசம்பர் மழை வெள்ளத்தை நினைவுகூரும் வகையிலும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டும் கிழக்கு தாம்பரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15 அன்று மிதிவண்டி பேரணி நடந்தது. சிறார்கள் இந்த மிதிவண்டி பயணத்தில் ஆர்வத்துடன் பங்கெடுத்தனர். மிதிவண்டிக்கு முன்னும் பின்னும் இயற்கை வளங்களை பாதுகாப்பதை வலியுறுத்தி வாசகங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. மிதிவண்டி பயணத்தை நேர்த்தியாக கொண்டு செல்ல கவனத்தில் கொள்ள வேண்டியவைகளை முன்கூட்டியே தெளிவாக பங்கெடுத்த அனைவரிடமும் அறிவிக்கப்பட்டது.
சேலையூர் ஏரிக்கு எங்கள் சைக்கிள் பயணத்தைத் தொடங்கினோம், ஏரியின் பரப்பளவு எப்படிக் குறைந்துள்ளது என்பதை நேரில் பார்த்தோம். முனைவர் பேராசிரியர் சக்திவேல் அவர்கள் திட்டமிடப்படாத நகரமயமாக்கல் நீர் பரவல் பகுதியை எவ்வாறு பாதித்தது என்பதை விளக்கினார். மேலும் பண்டைய காலத்தில் ஏரிகள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்ட விதம், மதகுகள் குறித்தும் விளக்கினார். நீரோட்டத்தின் திசையை வைத்து புவியியல் திசைகளைக் கண்டுபிடிப்பதற்கான எளிய வழியை பாரதி தோழர் கற்பித்தார்.
சேலையூர் ஏரிக்கு பிறகு கிழக்கு தாம்பரம் சாலைகளுக்குள் சைக்கிள் ஓட்டி கொண்டு எங்கள் இளம் சுற்றுச்சூழல் போராளிகள் தங்கள் மிதிவண்டி பயணம் மூலமாக அணிவகுத்துச் சென்றனர்.
காந்தி பூங்காவில், பொதுமக்கள் இடையே நடத்தப்பட வேண்டிய நீர் குறித்தான சமூக தணிக்கை பற்றிய செயல்முறையை சிறார்களிடம் விளக்கினோம். சிட்லபாக்கம் ஏரிக்கு பயணத்தைத் தொடர்ந்தோம். ஏரியை புதுப்பிக்க காரணமாக இருந்த சிட்லபாக்கம் ரைசிங் குழு Chitlapakkam Rising உறுப்பினர்களுடன் (முரளி மற்றும் ராம்குமார்) குழந்தைகள் சிறிது நேரம் உரையாடினர். ஏரியில் சேரும் சாக்கடை நீரை உள்ளூர் மக்களின் உதவியுடன் எப்படித் தடுத்தார்கள் என்பதை பகிர்ந்து கொண்டார்கள். முன்னாள் அரசு கல்லூரி முதல்வரும் பேராசிரியருமான சிவகுமார் அவர்கள் 'இயற்கை கற்றுக் கொடுக்கும் கணிதம்' என்ற தலைப்பில் தேனி கூடு பற்றி விளக்கியரை சிறார்கள் ஆர்வத்துடன் கவனித்தனர்.
கணேஷ் அவர்களின் உதவியுடன் செய்யப்பட்ட அவிச்ச வேர்க்கடலையை பங்கு எடுத்த அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. "நம் கூட்டு எதிர்காலத்திற்கான சிறுவர்கள் " என்ற தலைப்பில் நடத்தப்பட்ட தொடர் பயிற்சி வகுப்பில் பங்கெடுத்தவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
பின்னர் தன்னார்வலர்களின் உதவியுடன் நீர் குறித்தான மக்கள் கருத்தை ஏரிக்கு நடைப்பயிற்சி வந்தவர்களிடம் கேட்டு அறிய கேள்வித்தாளை சிறார்கள் எடுத்துச் சென்றனர். ஒவ்வொரு சிறார்களும் தங்களுக்கு அறியாதவர்களிடம் பொறுமையாக கேள்விகளை விளக்கினர். மேலும் பொதுமக்களும் கேள்விகளுக்கு ஆர்வத்துடன் பதிலளித்தனர்.
இந்தக் தகவல் சேகரிப்பில் சிறார்கள் முற்றிலும் புதிய அனுபவத்தைப் பெற்றனர். மக்களும் ஆர்வத்துடன் பங்கேற்று கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
மக்கள் தண்ணீருக்கு மாதம் ரூ.15000 வரை செலவழிப்பது ஆச்சரியமாக இருந்தது. பெரும்பாலான மக்கள் R.O தண்ணீரை குடிப்பதற்கு பயன்படுத்துகின்றனர், கிணற்று நீரை பயன்படுத்துவதில்லை. பெரும்பாலானவர்கள் தங்கள் ஏரியில் மீன்கள் இல்லை என்று பதிலளித்தனர்.
பாரதி தோழர் குழந்தைகள் நடத்திய கணக்கெடுப்பில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று விளக்கினார். பிறகு ரேஷ்மா அவர்களின் இயற்கை பற்றிய விழிப்புணர்வு பாடலுடன் மிதிவண்டி பேரணியை முடித்து கொண்டோம்.
இயற்கையின் அன்பால் இணைவோம் !
Comments
Post a Comment