Skip to main content

அகத்தீ - திரையிடலும் உரையாடலும் 'குற்றம் கடிதல் படம்

அகத்தீ - திரையிடலும் உரையாடலும்

 குற்றம் கடிதல் படம்

திரையிடலும் உரையாடல்
2024 டிசம்பர் 22 ஞாயிறு
“குற்றம் கடிதல்” திரைப்படத் திரையிடலுக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.
இத்திரைப்படம் ஒரு மாணவனை ஆசிரியர் கன்னத்தில் அறையும் ஒரு எதிர்பாராத சம்பவம் பல்வேறு பின்னணியில் உள்ளவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆராய்கிறது. திருக்குறளின் 44வது அதிகாரத்தின் தலைப்பிலிருந்து இந்த திரைப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதில் திருவள்ளுவர் குற்றத்தை தவிர்ப்பது பற்றி வலியுறுத்தி உள்ளார்.
குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்புப் பேச்சாளராக அரசுப் பள்ளி ஆசிரியை திருமதி உமா மகேஸ்வரி அழைக்கப்பட்டிருந்தார். திரைப்படத்தின் எடிட்டர் திரு.பிரேம் மற்றும் பள்ளிக்கரணை தாய்தமிழ் பாவணர் பள்ளியின் அய்யா மாந்தனேயன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இப்படம் கிழக்கு தாம்பரத்தில் உள்ள பாரதி தோழரின் வீட்டில் திரையிடப்பட்டது. படத்தின் 121 நிமிடங்கள் பார்வையாளர்களை திரையில் ஒட்ட வைத்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் படத்தைப் பார்த்தனர்.
படம் பார்த்த சிறுவர்களிடம் ஆசிரியர்களும் பெற்றோரும் அவர்களை அடிப்பது சரியா தவறா என்ற கேள்வி எழுப்பிய போது, கலந்து பட்ட பதில் வந்தது ஆச்சரியமாக இருந்தது. ஏன் கன்னத்தில் அடிக்க கூடாது என்பதற்கு ஐந்தாவது படிக்கும் மித்திரன் "கன்னத்தில் உள்ள நரம்புகள் மூளைக்கு செல்வதால் அப்படி அடிக்கும் போது அது மூளையை பாதிக்கும். நாங்க திருந்தனும் என்பதற்காக தானே அடிக்கிறார்கள் அதில் தவறில்லை, ஆனால் கன்னத்திலும் தலையிலும் தவிர்த்து மற்ற பகுதியில் அடிக்கலாம்" என்று அவன் சொன்னது ஆச்சரியமாக இருந்தது.
படத்தின் எடிட்டர் பிரேம் அவர்கள், 12 ஆண்டுகளுக்குப் பிறகும் இத்திரைப்படம் கொண்டாடப்படுகிறது என்னும் போது மகிழ்ச்சியாக உள்ளது. குழந்தைகளுடன் பார்த்ததும் அவர்களுடைய கேள்வியும் மிகவும் அருமையான அனுபவமாக இருந்தது என்றார்.
பாரதி தோழர் பேசும்போது பள்ளிப் பருவத்தில் சக மாணவனின் தாய் அதே பள்ளியில் ஆசிரியராக இருந்த காரணத்தினால், தன் மகனின் தவறை தைரியமாக பொறுப்பாசிரியரிடம் பாரதி சொன்னதற்காக அவரை கன்னத்தில் அடித்தார் அந்த ஆசிரியர் (மாணவனின் தாய்). இந்த சம்பவம் அவரை எவ்வளவு பாதித்தது என்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
குழந்தைகளை அடிப்பது பற்றி சுபா கணேஷ் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் போது கோபத்தில் இருக்கும் போது குழந்தைகளை அடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றார். சூழ்நிலைகள் நம் கட்டுப்பாட்டை மீறும் போது வீட்டில் குழந்தைகளை அடிக்கும் சூழ்நிலைகள் பற்றி கண்மணி அவர்கள் பகிர்ந்து கொண்டார். குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் மட்டும் பார்க்க முடியாது, வீட்டிலும் கூட நடக்கும் என்று பிரியா கூறினார்.
மாந்தனேயன் அய்யாவும், சங்கரன் அவர்களும், குழந்தைகளை அடிக்கும் அந்த ஒரு செயலை கடந்து, ஒட்டுமொத்த அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், தற்போதைய கல்வி முறை எவ்வாறு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்றனர். கல்வி முறை மாற்றப்பட வேண்டும், அப்போதுதான் சமூகத்தில் நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று அழுத்தமாக வலியுறுத்தினர்.
ஆற்றல்மிகு திறமையான அடுத்த தலைமுறையை உருவாக்க கல்வி முறையை எப்படி சீர்திருத்த வேண்டும் என்பது குறித்து தனது கருத்துக்களை எழுத்துக்களாலும் பேச்சாலும் தொடர்ச்சியாக பல தடைகளுக்கு இடையே தெரிவித்து வருபவர் அரசு பள்ளி ஆசிரியர் உமாமகேஸ்வரி அவர்கள். தினசரி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பேசுவதின் முக்கியத்துவத்தை அவர் அறிவுறுத்தினார். மேலும் குழந்தைகளை எந்த பயமும் இல்லாமல் எப்போதும் தங்கள் கருத்துக்களை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும், அதையே தனது பள்ளி மாணவர்கள் இடையே நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் பகிர்ந்து கொண்டார். பெற்றோர்கள் அடிக்கடி புத்தகங்களைப் படிக்க வேண்டும், குழந்தைகள் பெற்றோரைப் பின்பற்றுவார்கள், அவர்கள் படிக்கத் தொடங்குவார்கள் என்ற பெற்றோர்களிடையே வாசிப்பு பழக்கத்தின் முக்கியத்துவத்தை குழந்தைகளை வளர்க்கும் பார்வையில் இருந்து வலியுறுத்தினார். அவர் குழந்தைகளுடன் பொறுமையாகப் பேசிக் கொண்டிருந்தார், எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தார். தமிழ்நாட்டில் கல்வி முறைகள் எவ்வாறு இயங்குகின்றன என்பது குறித்து பெற்றோருடன் தனியாக ஒரு அமர்வில் பேச வேண்டும் என்று தனது விருப்பத்தை பகிர்ந்து கொண்டார்.
சங்கரன் தோழரின் முடக்கத்தான் சூப்பும், மாலை நேர சிற்றுண்டியாக வழங்கப்பட்ட ஜெய் தோழரின் சுண்டலும் சுவையாக இருந்தது. அன்பின் அடையாளமாக ஆசிரியர் உமாமகேஸ்வரி அவர்கள் எழுதிய புத்தகங்கள் அகத்தி தோழர்களிடம் கொடுக்கப்பட்டதை பாவாணர் பள்ளி மாந்தனேயன் அய்யாவிடம் வழங்கப்பட்டது. ஆசிரியர் உமாமகேஸ்வரி அவர்களுக்கு பாரதி தோழர் சில புத்தகங்களை பரிசளித்தார்.
இதுபோன்ற ஆரோக்கியமான பெற்றோர் ஆசிரியர் அமர்வை ஒரு திரையிடல் மூலம் சாத்தியமாக்கிய அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைச் சமர்ப்பித்து, அமர்வை நிறைவு செய்தோம்.
கல்வியும் கற்பித்தலும் ஒரு அரசியல் செயல்பாடு.

Comments