Skip to main content

அகத்தி என்னும் நிலம்

  சரியாக முன்று ஆண்டுகளுக்கு முன்பு பெரும் கனவுகளோடு (2016 ஜனவரி ) இந்த நிலத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்கினோம். நாங்கள் கூடுவதற்கு பேசுவதற்கு விவாதிப்பதற்கு திட்டமிடுவதற்கு செயலாற்றுவதற்கு கொண்டாடுவதற்கு முழு நிலவன்று கறி சோறு சாப்பிடுவதற்கு என்று எல்லாவற்றுக்கும் நிலம் தேவைப்பட்டது.
அப்படி ஒரு நிலத்தை கிணற்றை வயலை மரத்தடியை சில மாதங்களுக்கு முன்பு இழந்த வலியோடு சுற்றித்திரிந்தோம்.
நிலமே அடிப்படை !
நிலமே எங்கள் வாழ்வு ! 
நிலம் தான் எல்லாமே !

    ஒரு காட்டுச் செடி வளர்வது போல எங்களுடைய செயல்பாடு இருந்தது. குழந்தைகளுக்கான பொங்கல் விழா, சூழலியல் கருத்தரங்கம், மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிரான பரப்புரை, ஏரி பாதுகாப்பு என்று எங்கள்  வேலைகளை விரிவாக்கிக் கொண்டே சென்றோம். இதன் தொடர்ச்சியாக வீட்டுத்தோட்டம், விதைபந்து, நஞ்சில்லா விவசாயம் போன்றவற்றுக்கான முன்னெடுப்பை தீவிரமாகினோம். சென்னை மழை வெள்ளம் பல நல்ல உள்ளங்களை இணைந்தது.
இந்த நேரத்தில்தான் இந்த நிலம் எங்களுக்கு வசப்பட்டது. எங்கள் மகிழ்ச்சிக்கு ஒரு அளவே இல்லாமல் ஒவ்வொருவரும் மனதுக்குள்ளும் வாய்விட்டும் குதூகலித்தோம். 

    காட்டுச் செடியின் தாகத்தை தணிப்பதற்கு ஈரமுள்ள மனதை உடையவர்கள் இந்த நிலத்தை எங்களுக்கு அடையாளப்படுத்தினர். உண்மைதான் எங்களில் பலர் இந்த நிலம் எங்களுக்கு ஏற்படுத்த போகும் மிகப்பெரிய அடையாளத்தை உணர்ந்திருக்க வாய்ப்பில்லைதான். அடையாளங்களுக்குள் சிக்காமல் அன்பின் மீது ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற தீராத தாகத்தோடு செயல்பட்ட நாங்கள் அதற்கு தடையாக இருக்கும் எல்லாவற்றையும் கேள்விக்கு  உள்ளாக்கினோம். ஜாதியின் பெயரில் நடக்கும் பாகுபாட்டை மதத்தின் பெயரில் நடக்கும் வெறுப்பு அரசியலை, சுய திருப்திக்காக செய்யும் சமூக செயல்பாடுகளை என்று எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாகினோம். 
மேலிருந்து கீழாக இல்லாமல் ஒரு நீட்டு வாட்டத்தில் ஒரு குழுவை உருவாக்க முயற்சி செய்தோம். ஏராளமான புதிய இளைஞர்கள் வந்தார்கள் அதில் சிலர் எங்களோடு இணைந்தார்கள் அதிலும் சிலர் எங்களோடு பயணப்பட தொடங்கினார்கள். 

    நிலம் கிடைத்த மகிழ்ச்சி அடுத்து என்ன செய்யலாம் என்ற கேள்வி எங்களுக்குள் இருந்தது. காரசாரமான வாக்குவாதம், விவாதம், கருத்து பரிமாற்றம் என்று செயலையொட்டியே இருந்த அதே நேரத்தில் தோழர்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு செயல் வடிவம் கொடுக்க தொடங்கினோம்.

குழந்தைகளுக்கான இயற்கை வாழ்வியல் கோடை முகாம், சமகால அரசியல் நிகழ்வுகளை ஆராயக் கூடியதும் பாட்டி முதல் இளம் கவிஞர்களுக்கான  'தளம்' ஒன்று கூடுகை, மரபு விதை சேகரிப்பும் பெருக்கத்திற்குமான களமாகவும், நாடு முழுவதிலிருந்தும் வரும் சூழலியல் செயல்பாட்டாளர்களுக்கான இடமாகவும், பரவலாக அறியப்பட்டு மக்கள் கையில் எடுத்த விதைப்பந்து இயக்கத்திற்கான தாய் நிலமாகவும், புதிய முயற்சிகளுக்கான பரிசோதனை களமாகவும், பௌர்ணமி அன்று எங்களுக்கான தாய்வீடாகவும் இந்த நிலம் இருந்தது என்றால் அது மிகையல்ல. இப்படி பரினமித்தும், புதுபித்தும், தன்னை கடந்து வரும் அனைவரையும் தன்னகத்தே ஈர்த்தும் கொண்டிருந்தது நிலம். பலகனவுகளுக்கும் எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் இயக்கங்களுக்கும் செயல்களுக்கும் நிலம் தீனி போடுவதாகவே அமைந்தது. இயற்கை வளங்களையும் மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி தமிழகம் தழுவிய மிதிவண்டி பயணமும் இதே நிலத்திலிருந்து தான் தொடங்கியது.
நிலத்தோடு உறவாடுவோம்... 





அகத்தி
அறத்தின் வழி !

Comments