அகத்தீ - Community CHESS Competition
தகை சதுரங்க போட்டி
இந்த மாத தொடக்கத்தில் (02/03/25) தகை சார்பாக மட்டும் முன்னெடுத்து நடத்தப்பட்ட முதல் நிகழ்வு. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் சதுரங்க விளையாட்டிற்கான வரவேற்பு அதிகமாக காணப்படும் சூழலில், சமீபத்தில் இங்கிருந்து ஒரு இளைஞன் உலக சாம்பியனான பின்னணியில் சதுரங்க விளையாட்டிற்கான ஆர்வம் நம் குழுவிலும் அதிகமாக தென்பட்டது. கடந்த சில மாதங்களாகவே நம் குழுவில் உள்ள தோழர்கள் சந்திக்கும் போதும் சிறார்களுடன் சதுரங்கம் விளையாடுவது தொடர்ந்து நடந்து கொண்டிருந்த பின்னணியில், சதுரங்க விளையாட்டின் மூலம் நாம் ஒன்று கூடுவது தவிர்க்க முடியாததானது.
சதுரங்க விளையாட்டு போட்டி என்றவுடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காட்டிய ஆர்வம் வரவேற்க கூடியதாக இருந்தது. பெருங்களத்தூர் அன்பு அகாடமி தோழர் கலைச்செல்வி அவர்களின் உதவியுடன் மிகவும் நேர்த்தியாக நம்மால் நடத்த முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
தோழர் நீலாகிருஷ்ணன் அவர்களின் ஏற்பாட்டில் மதிய உணவு சுவையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்தது.
(பாரம்பரிய அரிசியான சோனா மசூறியில் காய்கறி கலவை சாதம், இன்சுலின் மூலிகை தொகையல், திணை பாயாசம், முழு நெல்லி ஊறுகாய் தொக்கு )
கிட்டத்தட்ட 20 நபர்கள் பங்கெடுத்தார்கள். சதுரங்கம் விளையாடக்கூடிய தாத்தா பாட்டிகள் கணிசமாக பங்கெடுக்க வேண்டும் என்பதே எண்ணமாக இருந்தது.
வீட்டில் அடைந்து கிடக்காமல் சதுரங்கம் விளையாடுவது மூலம் மூன்று தலைமுறைக்கான உரையாடல் நடக்க வேண்டும் என்பதே நம் விருப்பம். போட்டியில் வெற்றி பெறுவது முக்கியமல்ல நாம் பங்கெடுப்பது தான்.
இந்நாளை அழகாக்கிய அனைவருக்கும் மகிழ்ச்சி.
- தகை
Comments
Post a Comment