அகத்தீ--வகுப்பறைகளை கடந்த ஒரு பயணம்
மாற்று கல்வியை நாடும் பெற்றோர்களுக்கான வழிகாட்டுதலாக அமைந்தது ஏப்ரல் 14, 2025 அன்று வழக்கறிஞர் முனாசர் உடனான கலந்துரையாடல்
முனாசர் தனது எட்டாவது வகுப்புடன் பள்ளிக்கு செல்லுவதை நிறுத்திவிட்டு, அதன் பின்னர் ஓபன் ஸ்கூல் (0pen School) என்னும் NIOS வழியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளை வெற்றிகரமாக எழுதி தேர்வாகி உள்ளார். அதன் பின்னர் பி.காம் , LLB ஆகியவற்றையும் முடித்து தற்போது ஒரு வழக்கறிராகவும் பணிபுரிகிறார்.
வீட்டில் இருந்தபடியே பள்ளிப்படிப்பை பயின்ற காலகட்டத்தில் தனது குடும்பத் தொழிலிலும் ஈடுபட்டு, மாணவ பருவத்திலேயே நிறைய ஊர்களுக்கு தனியாக பயணித்து, பல அனுபவங்கள் மூலமாக வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான தெளிவையும் தன்னம்பிக்கையும் பெற்றிருக்கிறார் என்பது அவருடைய பேச்சில் தெளிவாக தெரிந்தது.
முனாசருடனான கலந்துரையாடல் தற்கால கல்வி முறையில் பயின்று வரும் சிறார்களின் பெற்றோருக்கும், மாற்று கல்வி முறையை நாடும் பெற்றோருக்கும் உள்ள நடைமுறை இடைவெளியை புரிந்து கொள்ள ஒரு அனுபவ வழிகாட்டுதலாக இருந்தது.
முனாசர் தன்முனைப்போடு பள்ளிப்படிப்பை முடித்து, இளம் வயதிலேயே நல்ல அனுபவங்களையும், அதன் மூலம் பக்குவத்தை வளர்த்து கொள்வதற்கும், தான் விரும்பியதை மகிழ்ச்சியாக செய்ய முடிந்ததற்கும் காரணம், தனக்கு கிடைத்த நேரத்தை தானே திட்டமிட கிடைத்த வாய்ப்பும், பெற்றோரின் ஆதரவும் இருந்ததை நெகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டார்.
- பெற்றோர்களாக எங்களின் பல கேள்விகளுக்கு தெளிவாகவும் பொறுமையோடும் முனாசர் பதிலளித்தார்.
- ஒவ்வொரு குழந்தை வளரும்போது அதன் தேவையை அறிந்து கொள்ள முற்படுவதிலும், பெற்றோர்கள் அதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பொருத்தும், இதுபோன்ற கல்வி முறையில் பயின்று பலன் பெறுவது சாத்தியமாகிறது.
- மாற்று கல்வி முறையில் படித்து வரும் குழந்தைகளுக்கும் இந்த கல்வி முறை நோக்கி பயணிக்க விரும்பும் பெற்றோர்களுக்கும் இந்த கலந்துரையாடல் ஒரு விழிப்புணர்வாக அமைந்தது.
உரையாடல் தொடரும்....
Comments
Post a Comment