கருத்துரையும் செயல்முறை விளக்கமும்
திடக்கழிவு மேலாண்மை
சவால்களும் தீர்வுகளும் !
• மக்கும் குப்பைகளை எளிமையாக வீட்டிலேயே துர்நாற்றம் இல்லாமல் உரமாக மாற்றலாம்
• அதற்கான நன்நுமிகளை நாமே வீட்டில் தயாரிக்கலாம்
25 ஆகசுட் 2019
ஞாயிறு
மாலை 3.30 மணி
அகத்தி தோட்டம்
சென்னை போன்ற நகரங்களில் குப்பைகளை சேகரித்து பிரித்து அப்புறப்படுத்துவது என்பது மிகப்பெரும் சவாலாக உள்ளது. இதன் காரணமாக நீர் நிலைகளிலேயே குப்பைகள் கொட்டப்படுவதும் எரிப்பதும் இன்று வழக்கமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒரு நாள் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க வில்லை என்றால் துர்நாற்றம் அடிக்கும் பகுதியாக மாறுகிறது. குப்பை தொட்டி இல்லாமல் வீட்டிலேயே சேகரிக்கும் ஏற்பாடு என்றால் வீடு நாறிவிடுகிறது. நுகர்வு வாழ்க்கை முறையினால் ஏற்படும் ஆபத்துக்களை உணர்ந்து மக்காத குப்பைகளை வீட்டினுள் கொண்டு வருவதையே நாம் உறுதியாக தவிர்க்க வேண்டும். மற்ற குப்பைகளை முறையாக மறுசுழற்சி செய்ய வேண்டும்.
துப்புரவு பணியாளர்கள் உங்களையும் என்னையும் போன்ற சக மனிதர்கள்தான். நாம் தொட அருவருக்கும் கழிவுகளை தங்கள் இரு கரங்களால் பிரித்து மிகப்பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். உண்மையில் இவர்களைப் பற்றி அக்கறை கொள்பவர்களாக இருந்தோமே ஆனால் நாம் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். வீட்டிலிருந்து வெளியேறும் முன்பே குப்பைகளை தரம் பிரித்து நாம் முறையாக அப்புறப்படுத்துவது அவசியம். வீட்டிலிருந்து வெளியேறும் குப்பைகளில் பெரும்பாலானவை சமையலறை மற்றும் மக்கும் குப்பைகள் தான். இதை முறையாக கையாண்டால் உணவு பயிருக்கான சத்தான உரங்களாக மாற்றலாம். இதனால் காற்று நீர் மண் மாசு அடைவதையும் சுகாதார சீர்கேட்டையும் தவிர்க்கலாம். இதுவே நம் எதிர்கால தலைமுறைக்கு செய்ய வேண்டிய கடமையாகும்.
எல்லாவற்றையும் குவிமையப் படுத்துவதும் மையப்படுத்துவதும் ஆபத்தானதே. அது குப்பையானாலும் சரி, அதிகாரம் ஆனாலும் சரி. பிரச்சினைகளை ஆங்காங்கே தீர்ப்பதே அதற்கான சரியான அணுகுமுறையாக இருக்கும்.
குப்பைகள் உருவாகும் இடம் வீடுகள் அல்ல, தேவைக்கானதாக இல்லாமல் லாபத்திற்காக மட்டும் செயல்படும் உற்பத்தி முறையே காரணம் ஆகும். நெகிழியை உற்பத்தியாகும் இடத்திலேயே அரசு தடுத்திருந்தால் மக்களை கட்டாய படுத்த வேண்டிய தேவையே இருந்திருக்காது. தொழிற்சாலை கழிவுகளால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தடுக்க அரசிடம் உருப்படியான எந்த திட்டமும் இல்லை. அரசு நிர்வாகம் என்பது முழுமையாக தோல்வி அடைந்து விட்டது. மக்களாகிய நாம் அரசை முறையாக செயல்பட வலியுறுத்தும் அதே சமயத்தில் நாமும் இதற்கான எளிமையான தீர்வுகளுக்கு செயல் வடிவம் கொடுத்து நம்பிக்கையான முன்மாதிரிகளாக விளங்க வேண்டிய வரலாற்று கடமை உள்ளது.
"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்." அதாவது நோய் அறிந்து நோய்க்கான மூலக்காரணம் அறிந்து அதை தணிக்கும் வழியை அறிந்து சரியாக செயல்பட வேண்டும், என்ற குறளுக்கு இணங்க பிரச்சினையை ஆழமாக புரிந்துகொள்ள உரையாடுவோம். அந்த புரிதலின் அடிப்படையில் ஆக்கப்பூர்வமாக களமாட செயல்படுவோம்.
வீட்டிலிருந்து வெளியேறும் திடக்கழிவுகளை கையாளுவதில் உள்ள சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றிய நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை அகத்தி தோட்டத்தில் நடைபெற்றது.




Comments
Post a Comment