Skip to main content

சூழலியல் பயணம் : பிச்சாண்டி குளம் காடு

 

சூழலியல் பயணம்:

பிச்சாண்டி குளம் காடு

• மண்ணின் மரங்களைக் கொண்டு உருவாக்கிய காடு

• கிராமப் பெண்களின் துணைகொண்டு சிறப்பாக செயல்படும் மூலிகை மற்றும் நாற்று பண்ணை

• பண்ணைக் குட்டை, காற்றாலை கொண்டு சிறப்பாக அமைந்துள்ள நீர் மேலாண்மை. இதைக் கொண்டு செய்யும் நஞ்சில்லா விவசாயம்

• புயலில் விழுந்த மரங்களை கொண்டும் பயனற்ற பொருட்களைக் கொண்டும் கட்டப்பட்டுள்ள சூழலியலுக்கு ஏற்ப வீடுகள்

• சூழலியல் கல்வி மூலம் அரசு பள்ளிக்கூடங்களை மாதிரி கற்றல்  வெளியாக பலப்படுத்தியது.

• பல்லுயிரின பாதுகாத்தலும் அதை முறையாக ஆவணப்படுத்தியதும்.

என்று இவையெல்லாம் ஒருசேர அமைந்துள்ள முன் மாதிரி பகுதியாக திகழுகிறது மரக்காணம் அருகில் உள்ள நடுகுப்பம் கிராமம். இது ஆரோவில்லில் இயங்கிக்கொண்டிருக்கும் தொண்டு நிறுவனமான பிச்சாண்டி குளம் காடுகள் அமைப்பின் முன்னெடுப்பாகும்.

இப்பகுதிக்கும் பிச்சாண்டி குளம் காட்டிற்க்கும் சூழலியல் கற்றல் பயணமாக கடந்த 16 நவம்பர் 2019, சனிக்கிழமை தாம்பரத்தில் இருந்து சென்று வந்தோம்.

 பிச்சாண்டி குளம் காடு அமைப்பின் முன்னெடுப்பை பற்றிய சிறு குறிப்பு

மரக்காணம் அருகே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நடு குப்பம் என்ற கிராமத்தில் கடந்த 17 ஆண்டுகளாக ஆரோவில்லில் இயங்கிக்கொண்டிருக்கும் தொண்டு நிறுவனமான பிச்சாண்டி குளம் காடுகள் அமைப்பு, சமூகம் சார்ந்த பணிகளை செய்து வருகிறது. 

கல்வி

நடுக்குப்பம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை உள்ளடக்கிய கிராமம்.

 நடுக்குப்பம் மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள அரசு பள்ளிகளிலும் தானாக முன்வந்து தேவையான வசதிகளை இந்த 17 வருடம் பள்ளிக்கும் மாணவர்களுக்கும் செய்து கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இயற்கை சார்ந்த கல்வியும் விழிப்புணர்வையும் மாணவர்களுக்கு கொண்டு சேர்க்க கழுவேலி என்விரொண்மெண்டல் எஜுகேஷன் டிரஸ்ட் என்ற பெயரில் ஒரு கல்விக் குழுவை நிறுவி, அனைத்து அரசு பள்ளிகளுக்கும் இயற்கை சார்ந்த கல்வியை கற்றுக் கொடுத்து வருகின்றனர். நடுக்குப்பம் அரசு பள்ளியில் 13 வருடத்துக்கு முன்பு, மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 10 சதவீதமாக இருந்தது. இவர்களின் முயற்சியாக தற்போது மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 90 ஆக உயர்ந்துள்ளது.

நடுக்குப்பம் காடு.

பிச்சாண்டி குளம் நிறுவனம் இடத்திற்கு தகுந்தார்போல், சுற்றுச்சூழலையும் பல்லுயிர் பெருக்கத்தையும் புரிந்துகொண்டு காடுகள் உருவாக்குவதில் தேர்ச்சி பெற்றவர்கள். அப்படியே ஆரோவில்லில் சுமார் 70 ஏக்கரில் TDEF ( tropical dry every green forest ) என்று சொல்லப்படும் கடலோர பகுதியில் தென்படும் காடுகளில் இயற்கையாக தகவமைத்துக் கொண்டு வளரும் மரங்களை கண்டறிந்து அதை வைத்து 70 ஏக்கர் அடர்ந்த காட்டை ஆரோவில்லில் உருவாக்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக நடு குப்பத்தில் சுமார் 35 ஏக்கர் இந்த TDEF என்று சொல்லப் படும் காடுகளில் உள்ள மரங்களை வைத்து ஒரு சிறு காட்டை உருவாக்கி பராமரித்து வருகின்றனர். இந்த காட்டில் தமிழ்நாடு முழுவதும் தென்படும் சங்கிலி ஏறி தொடர் வடிவமைப்பில் நிறைய குளங்களை வெட்டி அதன் மூலமாக நல்ல நிலத்தடி நீரையும் சேமித்து வருகிறார்கள். சிறிதளவில் இயற்கை  விவசாயமும் செய்யப்பட்டு வருகிறது. 

நர்சரி

ஆரோவில் பிச்சாண்டி குளம் காடுகளிலும் மற்றும் நடுக்குப்பம் காடுகளிலும் நர்சரி இயங்கி கொண்டு வருகிறது. TDEF மற்றும் தமிழ்நாட்டில் மிக முக்கியமான அபூர்வமான மரக்கன்றுகளையும் மூலிகைகளையும் நர்சரியில் பராமரித்து வருகிறார்கள். 

மூலிகை

சுமார் 20 வகையான மூலிகைகளை அதன் சுற்று வட்டாரத்தில் கிடைக்கும் செடி கொடிகளை கொண்டு தயாரித்து வருகிறார்கள். இந்த மூலிகை தயாரிக்கும் பணியில் அக்கிராமத்தில் உள்ள பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இது அப்பெண்களுக்கு சுய தொழிலாக அமைந்துவிட்டது.

இது மட்டுமில்லாமல் சில இடங்களில் நீர்நிலைகளை மீட்டெடுப்பதிலும், பல்லுயிர் மீட்டெடுப்பதிலும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மாற்று கட்டிடங்கள்

பொதுவாக மாற்று கட்டிடக்கலையில் பல வகைகள் உண்டு. நடுக்குப்பம் காடுகளை பொருத்தவரை உபயோகப் படாத பொருட்கள் என்று ஒதுக்கிய பொருள்களை வைத்து கட்டடங்களை எழுப்பியுள்ளனர். அதிலும் இந்தோனேசியா பாலி தீவில் புயலால் பாதிக்கப்பட்ட மரத்தை வைத்து பாலி ஹவுஸ் என்ற ஒரு அருமையான கட்டிடம் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல சுவாரசியமான கட்டமைப்புகள், உபயோகப்படாது என்று தூக்கி எறிந்த பொருட்களை வைத்து கட்டியுள்ளனர்.

இது மட்டுமில்லாமல் ஆரோவில்லில் உள்ள கிருஷ்ணா மெக்கன்சியின் சாலிடீயூடு கபேவில் காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு பிச்சாண்டி குளம் காட்டிற்குச் சென்றோம். அங்கு இந்த அமைப்பினர் உருவாக்கிய Tropical Dry Evergreen Forest (TDEF) எனப்படும் மண்ணின் மரங்களை கொண்டு மனிதர்களால் உருவாக்கிய சூரிய ஒளி கூட ஊடுருவ முடியாத அடர்த்தியான காட்டை கண்டது பிரமிப்பை ஏற்படுத்தியது. இதை மிகவும் சிறப்பாக  ஆவணப்படுத்தியும் உள்ளனர். பல்லுயிரின பாதுகாப்பு சார்ந்து ஆர்வம் கொண்டவர்கள் வேலை செய்ய விருப்பமுள்ளவர்கள் என அனைவரும் சென்று பார்த்து கற்க வேண்டிய ஒரு முன்மாதிரி இடம் பிச்சாண்டி குளம் காடு.

இந்தப் பயணத்தை அழகாக்கிய விஷ்ணு, அனுவியா, லூர்து ஐயா மற்றும் பயணத்தில் பங்கெடுத்த அனைவரும் ஆக்கபூர்வமான பெரும் ஆற்றலை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டது சிறப்பாக அமைந்து.










https://www.facebook.com/share/p/1Ad5xKQqTs/

Comments