அகத்தீ சார்பில் வெற்றிகரமாக நடைபெற்ற தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பயிலரங்கம்!
தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலமாக பத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை தொடர்புடைய அரசு அலுவலகங்களுக்கு எழுதி அனுப்பப்பட்டது.
அகத்தீ சார்பில் ஜூன் 15, 2025 அன்று 'தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005' குறித்த ஒரு நாள் பயிலரங்கம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்தப் பயிலரங்கில் கல்லூரி மாணவர்களும், அகத்தீ உறுப்பினர்களும் ஆர்வமுடன் பங்கேற்றுப் பயனடைந்தனர்.
நிகழ்வின் தொடக்கமாக, தோழர் பாரதி கண்ணன் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் (RTI) அறிமுகம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். குறிப்பாக, அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதில் RTI-இன் பங்களிப்பை எடுத்துரைத்தார். மேலும், கல்வி உரிமைச் சட்டம் (RTE) கொண்டு வந்ததால் அரசுப் பள்ளிகளில் ஏற்பட்ட தாக்கம் குறித்தும் விரிவாகப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வழக்கறிஞர் வழக்.ஆதன்(எ) சுரேந்தர் பாபு. அறி.இ.சட்ட.இ., அவர்கள், RTI சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்த ஆழமான அமர்வை நடத்தினார். அரசு தகவல் அலுவலர்களிடமிருந்து தெளிவான பதில்களைப் பெறுவதற்காக RTI கேள்விகளைத் திறம்பட உருவாக்குவது எப்படி என்பது குறித்தும், அவர் கையாண்ட பல்வேறு RTI வழக்குகள் குறித்தும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். மேலும், RTI சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் தற்போதைய முயற்சிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும், அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு சரியாகச் சென்றடையாதது குறித்தும் தனது கருத்துக்களை ஆழமாகப் பதிவு செய்தார்.
பயிலரங்கின் சிறப்பம்சமாக, RTI மனு தாக்கல் செய்ய விரும்பிய பங்கேற்பாளர்களுக்கு வழக்கறிஞர் வழக்.மு.அன்பரசன். வணிக.இ.சட்ட.இ., அவர்கள் தனிப்பட்ட முறையில் வழிகாட்டி, மனுக்களைத் தயாரிக்க உதவினார். இது பங்கேற்பாளர்களுக்கு ஒரு நேரடி அனுபவமாக அமைந்தது.
நிகழ்வின் முடிவில், பங்கேற்பாளர்கள் இந்தப் பயிலரங்கம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர் அவர்களின் பணிக்கு மதிப்பளிக்கும் விதமாக நினைவுப் பரிசு வழங்கி, திரு. பாரதி கண்ணன் நன்றியுரை ஆற்றினார். குழுப் புகைப்படத்துடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது. பங்கேற்ற மாணவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்திய வழக்கறிஞர் மற்றும் அனைவருக்கும் அகத்தீ தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
Comments
Post a Comment