Skip to main content

பள்ளி மாணவர்களுக்கான திறனறிதல் போட்டிகள் தமிழும் இயற்கையும்

அகத்தீ - பள்ளி மாணவர்களுக்கான திறனறிதல் போட்டி

அகத்தீ நடத்திய 'தமிழும் இயற்கையும்' என்ற தலைப்பில் மாணவர்களுக்கான திறனறிதல் போட்டிக்காக ஏனைய தலைப்புகளை எழுதி எழுதி திருத்திய பின்பு தமிழும் இயற்கையும் என்ற தலைப்பு மட்டுமே மிகவும் ஆழமான பொருள் மற்றும் பொருத்தம் உடையது என்று எண்ணி இறுதி செய்யப்பட்டது.
இந்த நிலப்பரப்பில் தமிழும் இயற்கையும் ஒன்றை ஒன்று சார்ந்து, பின்னி பிணைந்து பரிணமித்ததின் விளைவாக மனித குலத்திற்கான வாழ்வியல் ரகசியங்களையும் வழிகாட்டுதலையும் அள்ளி வழங்கி உள்ளது. ஆனால் இன்றைய காலச் சூழலில் இவை இரண்டை விட்டும் நாம் விலகிச் சென்றுள்ளோம். இதனை குறிப்பிட்டு கூற வேண்டும் எனில் தூய தமிழ் உரையாடலை கிண்டல் அடிப்பதில் தொடங்கி, தினமும் வீட்டிற்கு வாங்கி வரும் நெகிழிப்பை வரை கூறலாம்.
எனவே இவை குறித்து னையோர் பல்வேறு விழிப்புணர்வுகள் செய்து வந்தாலும், அகத்தீயும் இப்பெரு முயற்சியில் தனக்கான பங்களிப்பை நீண்ட காலமாக முன்னெடுத்து கொண்டுதான் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தான் பள்ளிக் குழந்தைகளிடம் இதனைக் கொண்டு செல்ல கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக முயற்சித்து திட்டங்களை தயாரித்து 24/01/2026 (சனிக்கிழமை) என்று நாள் குறித்து அனைவருக்கும் அறிவித்தப் பின் 23/01/2026 பிற்பகல் 2 மணி அளவில் திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடத்த இயலாதவாறு அரசு அன்று வேலை நாளாக அறிவித்தது. உடனடி முயற்சியாக மற்ற பள்ளிகளில் முயற்சித்தும் வாய்ப்பு கிடைக்காததால் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 25/01/2026 அன்று அதே கிறிஸ்து இராஜா நடுநிலைப் பள்ளியில் நிகழ்ச்சியை மாற்றி அமைத்தோம். இதனால் ஏற்பட்ட நெருக்கடிகளை எதிர்கொள்வது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது.
மாறிய சூழலில் அந்த நாளை கடந்தால் போதும் என்று அகத்தீ மனப்பால் குடித்த நிலையில் மாணவர்கள் சிற்றுந்து, மகிழுந்து, விசையுந்துகளில் பெற்றோர்களுடனும் ஆசிரியர்களுடனும் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் வந்து இறங்கினர். ஆனால் மொத்தத்தில் பதிவு செய்த மாணவர்கள், நடுவர்கள், தன்னார்வலர்கள் எண்ணிக்கை ஏறத்தாழ பாதியாக குறைந்தது.
போட்டியில் பங்கேற்க வந்த அனைத்து மாணவர்களுக்கும் கடலை உருண்டை மற்றும் எள்ளுருண்டையுடன் 'இந்திய விஞ்ஞானிகள்' என்ற சிறிய நூலை கொடுத்து வரவேற்றோம்.
காலை 9 மணிக்கு மாணவர்களின் வருகை பதிவிற்கு பிறகு பேராசிரியர் நிர்மல் செல்வமணி ஐயா அவர்களின் குரலில் ஐங்குறுநூறு 401 ஆம் பாடல் மறியிடைப்படுத்த மான்பிணைப் போல எனும் பாடலை முல்லை தீம்பாணி ராகத்தில் பாடி விளக்கம் அளித்து அகத்தீயின் தமிழும் இயற்கையும் மாணவர்களுக்கான திறனறிதல் போட்டியை தொடங்கி வைத்தார்
கவனத்தில் கொள்ள வேண்டிய சில அறிவிப்புகளை கொடுத்து போட்டிகளுக்கான அறைகளை குறிப்பிட்டு சகோதரி கலைச்செல்வி அவர்கள் தொகுத்து வழங்கினார். தன்னார்வலர்களின் பங்களிப்பால் கட்டுரை, ஓவியம், உறைவிச்சு, பாடல் கதை சொல்லல், வினாடி வினா, எதிரும் புதிரும், கவிதை, தனித்திறன் (குறும்படம், நூல் திறனாய்வு போட்டிகளுக்கான படைப்புகளை முன்னமே அனுப்பி இருந்தனர் ) என்று அறிவித்திருந்த போட்டிகளில் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்க தொடங்கினர்.
வந்திருந்த பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வாழ்வியல் அறிஞர் நம்மாழ்வார் எழுதிய 'நோயினை கொண்டாடுவோம்' எனும் புத்தகத்தை அன்பளிப்பாக கொடுத்தோம். எலந்த பழம் தேநீர் மற்றும் முருங்கை இலை சாறு போன்றவை குடுவைகளில் சகோதரி அபிஷா அவர்களால் தயாரித்து வழங்கப்பட்டது.
பிற்பகல் 12.30 மணி அளவில் மாணவர்கள் போட்டியை முடித்துவிட்டு முடிவுக்காக காத்திருந்த சூழலில் ஆசிரியர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் நடுவர்களுக்கும் 'வளம் ஆர்கானிக்சிலிருந்து' ஏற்பாடு செய்திருந்த தூயமல்லி சாம்பார் சாதம் மற்றும் குதிரைவாலி தயிர் சாதம் வழங்கப்பட்டது. மாணவர்களின் உணவு இடைவேளை முடிந்த பின்பு சகோதரர் சபரிநாதன் விவசாயி பழச்சாறு கடை மூலமாக நஞ்சியில்லாத தர்பூசணி சாறு வழங்கப்பட்டது.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தமிழையும் இயற்கையும் இணைத்த பனை மரத்தின் பெருமையை விளக்கி சங்க கால ஓலைச்சுவடிகளை நினைவு கூறும் விதமாக, பனை ஓலையில் லேசர் தொழில்நுட்பம் மூலமாக விருப்பப்பட்ட அனைவருக்கும் ஓய்வில்லாமல் அச்சிட்டு கொடுத்த பனையேறி பெருமாள் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இதற்கிடையில் வந்திருந்த பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது.
பிற்பகல் 2 மணி அளவில் சென்னை காலநிலை செயல்பாட்டுக் குழு சார்பாக சகோதரி சுபஸ்ரீ உலக நெகிழி ஒப்பந்தம் பற்றியும் குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் தொழில்நுட்பத்தில் உள்ள சவால்களை குறித்தும் மாணவர்களுடன் உரையாடினார்.
அதேபோல் வடசென்னையில் இருந்து வந்திருந்த வியாசை தோழர்கள் அமைப்பைச் சேர்ந்த 11வது படிக்கும் மாணவர்கள் தினேஷ், காவியா, தாரணி நவீன தொழில்நுட்ப உதவியுடன் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய தங்கள் பகுதியை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்து பத்திரிக்கையாளர் சந்திப்பு மூலமாக வெளியிட்ட அறிக்கைக்கு தமிழ்நாடு அரசிடம் இருந்து கிடைத்த வரவேற்பு மற்றும் இதன் மூலமாக பெற்ற சூழலியல் அறிவை பகிர்ந்து கொண்டனர். இவர்களுடைய செயல் போட்டியில் பங்கெடுத்த மாணவர்கள் மத்தியில் பாராட்டுதளையும் வரவேற்பையும் பெற்றது.
வடசென்னை வியாசை தோழர்களின் செயல்பாடை விளக்கும் விதமாகவும், தென் சென்னை அகத்தீ செயல்பாட்டை விவரிக்கும் விதமாகவும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.
ஏறத்தாழ 100 ஆண்டுகளைக் கடந்த நான்கு தலைமுறைகளாக பயன்பாட்டில் உள்ள ஆட்டு தோலை கொண்டு செய்யப்பட்ட பொம்மைகளைக் வைத்து நம் மண்ணின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான தோல்பாவை கூத்து நிகழ்த்தப்பட்டது. பின்னர் ஒரே நபர் பல விதமான குரலில் நகைச்சுவையாக பெண்கள் போல் பேசி காட்டியது மாணவர்கள் மத்தியில் தொடர் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. நம் மண்ணின் நாட்டுப்புற கலைகளை தலைமுறைகளை கடந்து பல நெருக்கடிகளுக்கு நடுவில் உயிர்புடன் வைத்திருக்கும் கலைஞர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தோல்பாவை கூத்து தமிழும் இயற்கையும் நிகழ்வின் மகுடமாக அமைந்தது என்றால் மிகை அல்ல. இதை ஏற்பாடு செய்து கொடுத்த சென்னை காலநிலை செயல்பாட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளர் தம்பி பிரசாந்திற்கு நன்றி.
கூத்து நடக்கும் பொழுதே சகோதரி நீலா கிருஷ்ணன் கைப்பக்குவத்தில் செய்த அண்ணாச்சி பழம் குழஞ்சல் (பைனாப்பிள் புட்டிங்) மற்றும் அருவி கணேஷ் அவர்களின் சத்தான சிறுதானிய உருண்டைகளும் மாணவர்கள் சுவைக்க வழங்கப்பட்டது.
இந்நேரத்தில் நடுவர்கள் போட்டியாளர்களில் வெற்றியாளர்களை தேர்வு செய்வதும், தன்னார்வலர்கள் பரிசு அட்டைகள் மற்றும் சான்றிதழ்களில் பெயர் எழுதுவதுமாக பரபரப்பாக இருந்தனர். வாழ்வியல் அறிஞர் நம்மாழ்வார் அவர்களின் வாசகத்துடன் மாணவர்கள் கையில் காலத்திற்கும் தவழும் விதமாக அழகாகவும் நேர்த்தியாகவும் சான்றிதழ்களை அச்சிட்டு கொடுத்த பகவான் தாஸ் அச்சகத்திற்கு இந்த தருணத்தில் நமது நன்றியை தெரிவிப்பது கடமையாகும்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசாக மதுரை மஞ்சப்பை நிறுவனத்தில் இருந்து அன்பளிப்பாக பெறப்பட்ட துணியால் செய்த அழகிய வெள்ளை நிற உணவு பை மற்றும் மாணவர்களின் அறிவு தேடலை விரிவாக்கும் விதமாக புத்தகங்களையும் பரிசாக வழங்கினோம்.
இடையிடையே பாட்டு, கதைச் சொல்லல் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை மீண்டும் அவர்களின் திறமையை நிறைவு நிகழ்ச்சியில் வெளிப்படுத்த சொன்னது அனைத்து தரப்பினரும் கண்டுக்களிக்க ஏதுவாக அமைந்தது.
பங்கெடுத்த அனைவரும் வெற்றியாளர்களே என்ற புரிதலோடு மாணவர்களின் திறமையை மதிப்பிட நடுவர்களிடம் குறிப்பிட்ட போது அவர்களுடைய பணி சவாலானதாக அமைந்தது. எந்த குழந்தையும் வையாமல் பொறுமையாக அனைவரின் திறமையையும் கண்டுகளித்து அதை மதிப்பிட்டதற்கு வாழ்த்துக்கள். இதில் கணிசமானோர் முனைவர் பட்டம் பெற்றவர்கள், பேராசிரியர்கள் எழுத்தாளர்கள், சூழலியல் செயல்பாட்டாளர்கள், குழந்தைகளுக்கான சிறப்பு கல்வியாளர்கள் என்று பன்முகம் கொண்டவர்கள் நடுவர்களாக பங்கெடுத்தனர் என்பது சிறப்பாகும்.
பல நெருக்கடிகளுக்கு நடுவில் நிகழ்ச்சி நடத்துவதற்கு இடம் கொடுத்து முழு ஒத்துழைப்பையும் நல்கிய கிறிஸ்துராஜா நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களுக்கு நன்றி என்று சொல்லி வார்த்தைகளில் சுருக்க முடியாது.
பங்கெடுத்த பல ஆசிரியர்கள் அடுத்த முறை தங்கள் பள்ளியில் அகத்தீ இந்த நிகழ்வு நடத்த வேண்டும் என்று உரிமையுடன் சொன்னது தமிழ் மற்றும் இயற்கையின் வெற்றியை குறிப்பதாக இருந்தது.
நிகழ்வின் நோக்கங்களை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்த பல பெற்றோர்களும் அகத்தீயின் இந்த செயல்பாட்டை மனதார பாராட்டினர் மாணவர்களுக்கு இது போன்ற பயனுள்ள நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.
அகத்தீ தோழர்களின் அன்றைய நாளின் அனுபவபகிர்வுடன் இனிதாக நிறைவடைந்தது. நிறைவான மற்றும் நெகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அகத்தீ
இயற்கைக்கு திரும்பும் பாதை

Comments