தமிழும் இயற்கையும் நிகழ்வும் அதன் தொடர்ச்சியும் .....
மொத்தம் 17 பள்ளிக்கூடங்களில் இருந்து 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மூன்று பிரிவுகளாக 11 போட்டிகளில் பங்கெடுத்தனர். 65 மாணவர்கள் பரிசு பெற்றார்கள்.
மாணவர்களுக்கான இந்த திறனறிதல் போட்டியை திட்டமிடும் போதே இது தொடர் நிகழ்வுகளுக்கான தொடக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம்.
இதன் காரணமாக மட்டுமே பரிசுகளை அதற்க்கு ஏற்றார் போல் திட்டமிட்டோம்.
ஒரு தலைமை ஆசிரியரின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் " நீங்கள் அறிவித்திருக்கும் பரிசு சிறப்பாக ஒன்றுமில்லை ஆனால் ஏதோ வித்தியாசமா இருக்கு" என்றார்.
ஆம் எங்களுக்கு பதக்கங்களும் கேடயங்களும் வழங்குவதில் விருப்பமும் இல்லை உடன்பாடும் இல்லை. அதற்கு மாற்றாக திட்டமிடும் போது உதித்த சிந்தனைகளே இவை
• அகத்தீக்கு நன்கு அறிமுகமான தாம்பரத்தை சுற்றி உள்ள இயற்கை விளைபொருள் அங்காடிகள் மூலமாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு அட்டைகளை வழங்கினோம்.
இதன் மூலம் நேரடியாக கடையில் சென்று மாணவர்கள் பரிசு பொருட்களை பெறும் போது ஏற்படும் உரையாடல்களையும் மிக முக்கியமாக கருதினோம்.
பரிசு அட்டைகளையும் சான்றிதழ்களையும் அச்சுக்கு கொடுத்த இடத்தில் பகவான் தாஸ் அச்சகத்தாரும் முன் வந்து அவர்களும் மாணவர்களுக்கான பரிசு அட்டையை வழங்க முன் வந்தது மிகவும் பாராட்டுக்குரியதாக அமைந்தது.
வாழ்வியல் அறிஞர் நம்மாழ்வார் அவர்களின் வாசகம் அடங்கிய நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சான்றிதழை நிகழ்வு அன்று பெற முடியாத வெற்றி பெற்ற மற்றும் பங்கு எடுத்த அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிக்கூடங்களில் கொண்டு சேர்த்தோம்.
பங்கெடுத்த பள்ளிக்கூடங்களுக்கு பனை ஓலையில் பள்ளியின் பெயரை அச்சிட்டு நினைவு பரிசாக கொடுத்தோம். நிகழ்ச்சி நடத்த இடம் அளித்த கிறிஸ்துராஜா நடுநிலை பள்ளிக்கு பனை ஓலை மற்றும் பனை மட்டையில் செய்த நினைவு பரிசை தலைமை ஆசிரியரிடம் வழங்கினோம்.
இதனுடன் மண்ணின் மரமான குதிரை பிடுக்கு மரத்தின் கன்றை பள்ளிக்கூடங்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தோம்.
இவைகளுடன் வெற்றி பெற்ற மாணவர்களை மாதிரி விவசாய பண்ணையான தமிழ் நிலம் தமிழ் பண்ணைக்கு வேளாண் சுற்றுலாவாக அழைத்துக் கொண்டு செல்வதாக உறுதியளித்த அடிப்படையில் கடந்த பிப்ரவரி 15 சென்று வந்தது சிறப்பான அனுபவமாக இருந்தது.
அதேபோல் வெற்றி பெற்ற பள்ளிக்கு காய்கறி அல்லது மூலிகை அல்லது நாற்று பண்ணை அமைத்து தருவதாகவும் சொல்லி இருந்தோம். அடுத்த பள்ளி ஆண்டு தொடக்கத்தில் அமைத்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.
மாணவர்களுடனான நம் சூழலியல் கற்றல் பயணம் தொடரும்.....
Comments
Post a Comment