கடந்த 14.06.2026, CCAG, CFA, AGATHI, FNCRWA, FEMA சென்னை மற்றும் பூவுலகின் நண்பர்கள் ஆகிய அமைப்புகள் இணைந்து, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கொண்ட 30-க்கும் மேற்பட்டோருக்கான ஒரு குப்பை பயணம் (Waste Tour) ஏற்பாடு செய்திருந்தன. இதில் பங்கேற்றவர்கள், தங்கள் வீடுகளில் உருவாகும் கழிவுகள் கொடுங்கையூர் குப்பை கிடங்குக்குச் எவ்வாறு செல்கின்றது என்ற பயணத்தை நேரில் கண்டறிந்தனர். கொடுங்கையூர் குப்பை கிடங்கு மற்றும் அங்கு அமையவுள்ள குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் (Waste-to-Energy - WTE) நிலையத்திற்கான இடத்தை ஆய்வு செய்வதோடு தொடங்கி, CPCLயின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், சடையன்குப்பம் மற்றும் தற்போது நிரந்தரமாக மூடப்பட்ட சின்னமாத்தூர் 10-டன் திறன் கொண்ட குப்பை எரிப்பு நிலையம் (incinerator) ஆகிய இடங்களையும் அவர்கள் பார்வையிட்டனர்.
குப்பை கிடங்கிற்கு மிக அருகில் இருப்பினும் பல்வேறு பறவைகளுக்கு வாழ்விடமாகத் திகழ்ந்த அந்த ஈரநிலம், தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது; அதன் ஒரு கால் பகுதி மட்டுமே தற்போது தன் இயல்பைத் தக்கவைத்துள்ளது. முன்மொழியப்பட்ட WTE நிலையத்தைக் கட்டுவதற்காக, மண் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்த கலவையால் அந்த இடம் நிரப்பப்பட்டு வருகிறது; இது பல்வேறு உயிரினங்களின் வாழ்விடத்தை ஆபத்துக்குள்ளாக்குகிறது. இத்திட்டத்திற்கு எதிராகப் பொதுமக்களின் கடும் எதிர்ப்பு இருந்தபோதிலும், கடந்த ஓராண்டில் பறந்து விரிந்திருந்த ஈரநிலமான பகுதி சிறு குட்டையான அவலம் நிகழ்ந்துள்ளது.
'குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும்' (WTE) நிலையங்கள் என்பவை உண்மையில் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை அல்ல; அவை வெறும் "பசுமைப் போலி" (green-washing) முயற்சிகளாகவே கருதப்படுகின்றன என்பதையும், பல வளர்ந்த நாடுகளில் இத்திட்டங்கள் படிப்படியாகக் கைவிடப்பட்டு வருகின்றன என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
பின்னர், அக்குழுவினர் CPCLயின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்குச் சென்று, கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோலியப் பொருட்கள் தயாரிக்கப்படும் செயல்முறைகள் குறித்து அறிந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து அருகிலுள்ள சடையன்குப்பம் பகுதிக்குச் சென்ற அவர்கள், அங்குள்ள பக்கிங்ஹாம் கால்வாயைப் பார்வையிட்டனர்; 'மிக்சாங்' (Michaung) புயலின் விளைவாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு CPCL-லிருந்து கசிந்த எண்ணெய் அந்தக் கால்வாயில் கலந்திருந்ததை அவர்கள் அங்கு காண முடிந்தது.
FNCRWA மற்றும் பிற பருவநிலை மாற்றச் செயல்பாட்டாளர் குழுக்களின் தலைமையில் எழுந்த மக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து நிரந்தரமாக மூடப்பட்ட சின்னமாத்தூர் 10-டன் உலர் கழிவு எரிப்பு நிலையத்தைப் பார்வையிட்டதோடு, இச்சுற்றுலா ஒரு நம்பிக்கையான குறிப்புடன் நிறைவடைந்தது. இருப்பினும், அந்த நிலையத்திற்கு அருகிலுள்ள குளத்தில் பறக்கும் சாம்பல் (fly ash) மற்றும் அடியில் தங்கும் சாம்பல் (bottom ash) படிவுகள் இருப்பதை பங்கேற்பாளர்கள் கவனித்தனர்; இது அந்த நீர்நிலையின் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் குறித்த கவலைகளை எழுப்பியது.
பரவலாக்கப்பட்ட கழிவு மேலாண்மையின் முக்கியத்துவத்தையும், அண்டை மாநிலமான கேரளா இம்முறையை முன்னோடியாகக் கொண்டு தனது மாநிலம் முழுவதும் வெற்றிகரமாகச் செயல்படுத்திய விதத்தையும் அக்குழுவினர் உணர்ந்துகொண்டனர். நகரின் கழிவுகளைத் திறம்படக் கையாள்வதற்கும், நகரவாசிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அவர்களின் 'கழிவுப் பிரச்சினைக்கு' நிரந்தரத் தீர்வு காண்பதற்கும், உற்பத்தியாகும் இடத்திலிருந்தே பொறுப்புணர்வுக்கு முன்னுரிமை அளிக்கும் பரவலாக்கப்பட்ட கழிவு மேலாண்மை முறையை நோக்கி பெருநகர சென்னை மாநகராட்சி நகர வேண்டும் என்றும், அதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
"கொடுங்கையூர் குப்பை கிடங்கு காரணமாகவே இப்பகுதியில் உள்ள ஆண்களுக்கு திருமணம் நடக்காத சூழலில் இந்த இடத்தை விட்டு அவர்கள் இடம்பெற வேண்டிய கட்டாயத்திற்கு பலர் தள்ளப்பட்டு இருந்தனர்" என்று FEMA அமைப்பைச் சார்ந்த மோகன் அவர்கள் குறிப்பிட்டது அதிர்ச்சியாக இருந்தது.
"ஒரு காலத்தில் சதுப்பு நிலமாக இருந்த இந்தப் பகுதி, இப்போது ஆக்கிரமிக்கப்பட்டு மண்ணால் நிரப்பப்பட்டுள்ளது," என்று CCAG அமைப்பைச் சேர்ந்தவரும், இந்தப் பயணத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான பிரசாந்த் அவர்கள் கூறினார்.
"2001-ஆம் ஆண்டில் கொடுங்கையூர் கால்வாய் சுத்தமாக இருந்தது; தற்போது குப்பைக் கிடங்கு அமைந்துள்ள பகுதிக்குள் இருக்கும் அருகிலுள்ள குளத்தில் நாங்கள் குளிப்போம், நிறைய ஆமைகள் இருந்தது, மீள்களும் பிடித்துள்ளோம்" என்று FEMA சென்னையைச் சேர்ந்த செல்வம் அவர்கள் கூறினார்.
"அலையாத்திக் காடுகள் இருக்கும் ஒரு ஆற்றில் இந்தியாவில் வட சென்னை தவிர வேறு எந்த ஒரு பகுதியிலும் இவ்வாரு கச்சா எண்ணெய் கழிவுகள் ஓடுமா?" என்று FFF சென்னையை சேர்ந்த கிரிஹரன் அவர்கள் வினவினர்.
"பரவலாக்கப்பட்ட கழிவு மேலாண்மையை ஊக்குவிப்பதும், கழிவு உற்பத்தியாளர்களைப் பொறுப்புக்கூறச் செய்வதும் தான் இதற்கான இறுதித் தீர்வாகும்." என்று சுற்றுப்பயணத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பாரதி அவர்கள் நிறைவாக குறிப்பிட்டார்.














Comments
Post a Comment